நாகர்கோவில்: ஒருங்கிணைந்த கல்வியின் மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, திட்ட ஒப்புதல் குழு 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் 7043 அரசு நடுநிலை பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பயன்பெறுவர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கற்பிக்கும் தற்காப்பு பயிற்சியால் தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு, ஆரோக்கியம், நலம் பேணுதல் மற்றும் வலிமையான உடல் ஆகியவற்றை தருவதால் மாணவிகளின் பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் உயர் தொடக்க வகுப்புகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவியர்களையும் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்யும் முன்னர் அப்பகுதியில் தற்காப்பு கலை பயிற்சி கொடுக்க தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் வீதம் வாரத்திற்கு இரு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.