திருவண்ணாமலையில் இன்று பக்தர்கள் 2வது நாளாக கிரிவலம்

திருவண்ணாமலை: பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு, கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி, இந்த மாத (ஆவணி) பவுர்ணமி கிரிவலம் நேற்று காலை 8.15 மணிக்கு தொடங்கியது. பவுர்ணமி தொடங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேரம் ஆக ஆக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இரவு 9 மணிக்கு பிறகு கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. மேலும் திருவண்ணாமலையில் நேற்றிரவு மழை பெய்தது. கொட்டும் மழையிலும் விடியவிடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள், ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணிநேரம் வரிசையில் காத்திருந்த பிறகே பக்தர்களால் சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது.

வழக்கம்போல் கோயிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலத்தையொட்டி எஸ்பி சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 10.20 மணிக்கு பவுர்ணமி நிறைவடைந்தது.

Related Stories: