சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் மாஜி கமிஷனரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை ரத்து : வீட்டை சுற்றி வளைத்தது சிபிஐ

கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடியில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டது. அந்த வழக்கை விசாரிக்க, சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டார். கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரான இவர், தற்போது மேற்கு வங்க சிஐடி கூடுதல் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். இவர் தலைமையில்தான் சாரதா மோசடி வழக்கில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இவரின் தலைமையில் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்பதால், 2014ம் ஆண்டில் இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது.  அதில், பண முறைகேடு விவகாரம் தொடர்பான ஆவணங்களை இவர் அழித்தார் சிபிஐ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக, அவரைக் கைது செய்வதற்கு சி.பி.ஐ முயற்சி செய்த போது, மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு தடுத்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ராஜிவ் குமாரை கைது செய்ய சிபிஐ உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அதேபோல், கைது செய்வதிலிருந்து தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராஜிவ் குமார். இதையடுத்து,  அவரை கடந்த மே 24ம் தேதிவரை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தடைக்காலம் முடிந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக ராஜிவ் குமாருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது. பின்னர், சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்வதற்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ராஜிவ் குமார் தடை உத்தரவு பெற்றிருந்தார். இதனால், அவரை கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில், அவரை கைது செய்வதற்கு தடை விதித்து பிறப்பித்திருந்த உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. அதோடு, வழக்கில் ஆஜராக சிபிஐ பிறப்பித்த சம்மனை ரத்து செய்யவும் மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் சிபிஐ அதிகாரிகள் ராஜிவ் குமாரின் இல்லத்துக்கு விரைந்தனர். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

Related Stories: