பஞ்சாப் வங்கியில் 13,000 கோடி மோசடி நீரவ் மோடி தம்பிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்

புதுடெல்லி: குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது மாமா மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பி விட்டனர். இவர்கள் சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள நீரவ் மோடி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பண மோசடி வழக்கில் நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடி, பன்சாலி ஆகியோருக்கு எதிராக சர்வதேச போலீசான இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், பெல்ஜியத்தில் வசித்து வரும் நீரவ் மோடியின் தம்பி நேஹல் மோடிக்கும், நீரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடிக்கு உதவியதாக  சர்வதேச போலீஸ் நேற்று ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது. அமலாக்கத் துறை அறிவுறுத்தலின்படி இன்டர்போல் தனது 192 உறுப்பு நாடுகளுக்கும் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. இதன்படி, நேஹல் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த முடியும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி கடன் பெற்று மோசடி செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் அதற்கான சாட்சியங்களை அழிக்கும் வகையில் நேஹல் மோடி துபாயில் உள்ள நீரவ் மோடியின் அலுவலகத்தில் இருந்து 50 கிலோ தங்கம் மற்றும் குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து சென்றதாக அவர் மீது இன்டர்போல் விநியோகித்த நோட்டீசில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: