புலியின் உடல் உறுப்புகளை கடத்தியவருக்கு பண பரிமாற்ற சட்டத்தில் சிறை தண்டனை : நாட்டில் முதல் முறை

புதுடெல்லி:  புலியின் உடல் உறுப்புகள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவருக்கு, சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு புலியின் உடல் உறுப்புக்களை காரில் கடத்த முயன்றதாக சுரஜ்பான், நரேஷ் மற்றும் சுரஜ்பால் ஆகிய 3 பேரை டெல்லி போலீசார் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். புலியின் உடல் உறுப்புக்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதன் காரணமாக, சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் இந்த வழக்கை கையில் எடுத்தது. குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் மீதும் 2013ம் ஆண்டு வழக்கு பதிந்தது. இவர்களில், சுர்ஜ்பால் என்பவர் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது உயிரிழந்து விட்டார்.

 

இந்த வழக்கில், 2015ம் ஆண்டு அமலாக்கத் துறை சார்பில் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அதற்கடுத்த ஆண்டு டிசம்பரிலும் 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் சுரஜ்பான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 9ம் தேதி சுரஜ்பானுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பட்டியாலா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 10ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சுரஜ்பானுக்கு சொந்தமான ₹52.7 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நரேஷ் விடுதலை செய்யப்பட்டார். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல் முறை.

Related Stories: