அதிமுக பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் பரிதாப பலி,..தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்: மனித உயிர்கள் அவ்வளவு கேவலமாகி விட்டதா?

* இன்னும் எவ்வளவு ரத்தம் குடிக்கப் போகிறீர்கள்?

* பிளாஸ்டிக்கை போல பேனருக்கும் முதல்வர் தடைவிதித்தால் என்ன?

* சரமாரியாக கேள்விகளை தொடுத்தது

* தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

* சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சத்தை அரசு தரவேண்டும். இந்த தொகையை தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

* தவறு செய்த அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* உயிர் பலி கொடுத்தால்தான் அரசு நிர்வாகம் செயல்படுமா?

*  கட்டவுட், பேனர்கள் வைத்தால்தான் நிகழ்ச்சிகளுக்கு தலைவர்கள் வருவார்களா?

சென்னை: அதிமுக பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. ‘மனித உயிர்கள் அதிகாரிகளுக்கு அவ்வளவு கேவலமாகிவிட்டதா? இந்த நாட்டில் மனித உயிருக்கு மரியாதை இல்லை. சாலையில் சிந்தும் மனித ரத்தத்தின் மீது நின்று கொண்டு அரசியல் செய்கிறீர்கள். எவ்வளவு நாள் மனித ரத்தத்தை குடிப்பீர்கள்’ என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்தது. மேலும் இறந்துபோன சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம் தரவேண்டும் என்றும் அந்த தொகையை தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக உள்ளார். இவரது மகள் சுபஸ்ரீ (23). எம்டெக் முடித்துள்ளார். துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் வேலை முடித்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டார். குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கிமீ தூரத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. ரேடியல் சாலையில் ஸ்கூட்டியில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீரென சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். அப்போது கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி சுப மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சுபஸ்ரீஇறந்தார். தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பீகாரை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்வதா அல்லது பள்ளிக்கரணை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு போலீசார் வழக்குப்பதிவு செய்வதா என்று அரை மணி நேரம் வாக்குவாதம் எழுந்தது. இறுதியில் மவுண்ட் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுபயின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலைமறைவான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சுபஸ்ரீ பேனர் விழுந்து பலியான சம்பவம் உயர் நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பாக ேபசப்பட்டது. உயர் நீதிமன்றம் சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கக் கூடாது என்று பல முறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வக்கீல்கள் லட்சுமி நாராயணன், வி.கண்ணதாசன் ஆகியோர், நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை ஆஜராகி, பள்ளிக்கரணையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ பலியாகியுள்ளார்.

லாரி டிரைவர் மீது கவனக்குறைவாக லாரியை ஓட்டியுள்ளார் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். பேனரை வைத்தவர் மீது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக சாதாரண வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.   இதைக்கேட்ட நீதிபதிகள், ‘‘நீதிமன்றம் ஏற்கனவே சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பதை தடுப்பது தொடர்பாக பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில்லை. மனித ரத்தம் உறிஞ்சுபவர்களாக இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை மீறி வருகிறார்கள். தலைமைச்செயலகத்தை, உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் உத்தரவை தவிர எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்துவிட்டோம்.  அரசியல்கட்சி தலைவர்களை, மகிழ்விப்பதற்காக கட்சியினர் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுகிறார்கள், உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமோ, ரூ.3 லட்சமோ இழப்பீடுகளை அரசு கொடுத்துவிடுகிறது. ஆனால் தொடர்ந்து இதுபோன்ற பலி நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் ஆஜராகினர். அவர்களை பார்த்து நீதிபதிகள், ‘‘மனித உயிர்கள் அதிகாரிகளுக்கு அவ்வளவு கேவலமாகிவிட்டதா? இந்த நாட்டில் மனித உயிருக்கு மரியாதை இல்லை. சாலையில் சிந்தும் மனித ரத்தத்தின் மீது நின்று கொண்டு அரசியல் ெசய்கிறீர்கள். எவ்வளவு நாள் மனித ரத்தத்தை குடிப்பீர்கள். இறந்து போன அந்த குழந்தையின் பெற்றோருக்கு நஷ்ட ஈடு மட்டும் தந்தால் போதுமா?, அந்த குழந்தையை திருப்பி தர முடியுமா? எத்தனை லிட்டர் ரத்தத்தை குடிக்க உள்ளீர்கள்?. கிடா வெட்டி காது குத்து விழா நடத்த பேனர் வைத்தால் மட்டும் தான் விருந்தாளிகள் வருவார்களா?, நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?, சாலையில் விழும் ரத்தம் தொடர்கிறது. இது உங்களுக்கு ெதரியாதா?

 அதிகபட்சமாக அரசோ, மாநகராட்சியோ நஷ்ட ஈடு மட்டுமே தரமுடியும். சமுதாயத்தை பற்றி அதிகாரிகள் கவலைப்படுவதில்லை. தனிமனிதர்களுக்காக இதுபோன்ற விதிமீறல்கள் நடக்கிறது. ஆட்சி செய்பவர்களிடமிருந்துதான், ஒழுக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் அரசு நிர்வாகத்தை நடத்த முடியாது. நீதிமன்ற பணிகளை செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை.  நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை. இந்த நீதிமன்றம் சட்ட விரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்றும், அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும், பேனரை வைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு முதல் இதுவரை 5 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் எந்த உத்தரவையும் அமல்படுத்தவில்லை.   அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, நொறுக்குத்தீனிகளை ஒவ்வொரு மீட்டிங்கிற்கும் மாற்றுவது போல், கமிட்டி அமைக்கிறோம், துணை கமிட்டி அமைக்கிறோம் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விட்டு கலைந்து விடுகிறார்கள். குற்றம் நடக்க அனுமதி அளித்து விட்டு, அதன் பிறகு நிவாரணம் தேடி ஓடுகிறார்கள்.

  இறந்த குழந்தையின் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது?. இப்போது அந்த குழந்தையின் ரத்தத்தின் மீது நின்று கொண்டு பேசுகிறீர்கள். அரசியல் கட்சிகளை தவிர பேனர்களை மற்றவர்கள் வைப்பதில்லை. அதிகாரிகளுக்கு பொறுப்பு என்பது கேள்விக்குறியான விஷயமாகிவிட்டது. உயிர்பலிகள் அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் ஏற்படுகிறது. முதலமைச்சர்  பிளாஸ்டிக்கை தடை செய்து அறிவித்தார். ஆனால், பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்று அவரது கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தவில்லை. ஹெல்மெட் சட்டத்தை மட்டும் அமல்படுத்தினால் போதுமா?.   உயிருக்கு சிக்கல் ஏற்படும் என்று தெரிந்தும் ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தை ஓட்டுகிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விதி மீறல். ஆனால், பேனர் என்பது அதிகாரிகளின் தயவோடுதான் வைக்கப்படுகிறது. இதில் சமூக சிந்தனையும் வேண்டும். முதல்வரால் பேனருக்கு ஏன் தடை விதிக்க முடியாது? முதலில் அதை செய்யச்சொல்லுங்கள். ராணிமேரி கல்லூரியில் இருந்து சென்னை பல்கலை வரை சென்டர் மீடியனில் பேனர்கள் வைத்துள்ளார்கள். கொடிகளை கட்டியுள்ளார்கள். யார் அதற்கு அனுமதி கொடுத்தது?. பேனரை வைத்தவர்கள் யார்?, இன்னும் வேறு சம்பவங்கள் நடக்க வேண்டுமா?, இதைத்தான் எதிர்பார்க்கிறீர்களா?.

 வழக்கை மதியம் 2.15 மணிக்கு தள்ளிவைக்கிறோம். அப்போது கடற்கரை சாலையில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றி, நீதிமன்றத்தில் தகவல் ெதரிவிக்க வேண்டும். அதேபோல் பள்ளிக்கரணையில் பேனர் வைக்க அனுமதி கொடுத்த போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.  பின்னர் மதியம் 2.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர், பள்ளிக்கரணை உதவி கமிஷனர் சவுரிநாதன், பரங்கிமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகினர். அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, காமராஜர் சாலையில் பேனர்கள், கொடிகள் அகற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

நீதிபதிகள்: சட்டவிரோத பேனர்கள் வைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

அட்வகேட் ஜெனரல்: லாரி ஓட்டுநர் மீது கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் வைத்த ஜெயபால் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள்: வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டரை கூப்பிடுங்கள்.

(அப்போது பங்கிமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆஜரானார்)

நீதிபதிகள்: சம்பவம் எப்போது நடந்தது?

இன்ஸ்பெக்டர்: மதியம் 2.30 மணிக்கு நடந்தது.

நீதிபதிகள்: எத்தனை மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றீர்கள்?

இன்ஸ்பெக்டர்: தகவல் வந்தவுடன் சென்றேன்.

நீதிபதிகள்: எல்லை பிரச்னையால் உடலை சாலையிலேயே போட்டுவிட்டீர்களா? வழக்கு யார் பதிவு செய்ய வேண்டும்? எத்தனை மணிக்கு வழக்கு பதிவு செய்தீர்கள்?

இன்ஸ்பெக்டர்: மாலை 4.30 மணிக்கு வழக்கு பதிவு செய்தோம்.

நீதிபதிகள்: நீங்கள் பதிவு செய்த எப்ஐஆரில் உள்ள பார்வை மகஜரில் பேனர் விழுந்த தகவலை சொல்லவில்லை. அப்படியென்றால் பேனர் வைத்தவரை விட்டுவிட நினைக்கிறீர்களா? எத்தனை ஆண்டுகள் போலீசாக பணியாற்றுகிறீர்கள்?. இந்த விஷயம் கூட தெரியாதா?

இன்ஸ்பெக்டர்: தவறுதலாக நடந்துவிட்டது.

அட்வகேட் ஜெனரல்: பேனர் வைக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் கட்சி  ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நீதிபதிகள்: வக்கீல் கண்ணதாசன் உங்கள் கட்சி என்ன அறிவிப்பை வெளியிட்டுள்ளது?

வக்கீல் கண்ணதாசன்: ஏற்கனவே கட்சியின் தலைவர் பேனர் வைக்க கூடாது என்று அறிவித்துள்ளார். இன்றும் கட்சி தொண்டர்களுக்கு அறிவித்ததுடன் மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். (இதையடுத்து திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்).

அட்வகேட் ஜெனரல்: ஆளும்கட்சி, பிரதான எதிர்கட்சி தவிர மற்ற கட்சிகளும் பேனர் வைக்க கூடாது என்று தங்கள் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நீதிபதிகள்: சட்டவிரோத பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்தெந்த அரசியல் கட்சியினர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

வக்கீல் லட்சுமி நாராயணன்: ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

நீதிபதிகள்: ஏதாவது நல்ல காரியம் நடக்க வேண்டும் என்றால் உயிர் பலி கொடுக்க வேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள். உயிர் பலி கொடுத்தால்தான் அரசு நிர்வாகம் செயல்படுமா? காதுகுத்து, கிடா வெட்டு என்று தங்கள் நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைப்பது கலாச்சாரமாகிவிட்டது. மதுரை பக்கம் போய் பாருங்கள். தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை.

தலைமை செயலாளர் தலைமையில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக ஒரு குழு அமைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை அதிகாரிகள் சரியாக அமல்படுத்திவருகிறார்கள். ஆனால், பேனர் விஷயத்தில் மட்டும் ஏன் அதிகாரிகள் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். அரசியல் கட்சியினர்தான் பேனர் கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார்கள். இனி எந்த நிகழ்ச்சிக்கும் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று அரசியல் கட்சியினர் உறுதி அளிக்க வேண்டும்.  தலைமை செயலாளர் பேனர் வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.

பலியான சுபயின் குடும்பத்திற்கு தற்காலிக நிதியாக ரூ.5 லட்சத்தை அரசு தரவேண்டும். இந்த தொகை அவர்கள் இழப்பீடு கோருவதில் சேராது. இந்த தொகையை தவறு செய்த அதிகாரிகளிடமிருந்து அரசு வசூலித்து கொள்ள வேண்டும். பேனர் விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை போலீஸ் கமிஷனர் கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கரணை மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து போலீசார் விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: