துறையூர் அருகே வனப்பகுதியில் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்: காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை

துறையூர்:திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம் கோம்பை ஊராட்சியில் வனப்பகுதியில் மருதை மலைவாழ் கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் 26 வயதுடைய ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பள்ளி அமைந்துள்ள மலைக்கிராமத்துக்கு செல்ல போதிய பஸ்வசதி கிடையாது.  அதனால் அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் செல்ல வேண்டும். கடந்த 9ம் தேதி மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்ததும் பள்ளி ஆசிரியை வீட்டுக்கு செல்வதற்காக மருதையில் இருந்து செம்புளிச்சான்பட்டிக்கு அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த மலைக்கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அங்கு வந்தான்.

ஆசிரியையை வழிமறித்து, அவரிடம் இருந்து பணத்தை பறித்ததுடன், அவரை பலாத்காரம் செய்ய முயன்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அந்த சிறுவனிடம் இருந்து தப்பி மலைக்கிராமத்துக்கு மீண்டும் வந்துவிட்டார். பின்னர் இதுபற்றி கிராம மக்களிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள், துறையூர் போலீசாருக்கும், ஆதிதிராவிட பழங்குடியினர் திட்ட அலுவலருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மறுநாள் காலை ஆதிதிராவிட பழங்குடியினர் திட்ட அலுவலர் ரெங்கராஜ் சம்பந்தப்பட்ட மலைக்கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையே போலீசார் அந்த ஆசிரியையையும், சிறுவனையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து சமரசம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மலைக்கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்றுமுன்தினம் இரவு துறையூர் போலீஸ்நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை கைது செய்யவேண்டும். அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும், ஆசிரியைக்கும், அப்பகுதி பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் அங்கு கலைந்து சென்றனர்.

Related Stories: