பவானி ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு: பவானி ஆற்றில் 5 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கும் வகையில் 5  இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியின் பொது பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழகத்தில்கூட்டுறவு  இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பயிர்கடனை பொறுத்தவரை  ஈரோடு மாவட்டத்தில் 99.75 சதவீதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல  மற்ற கடன்களை பொறுத்தவரை 96.50 சதவீதம் திருப்பி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரும் வகையில் குடிமராமத்து பணி  சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் மழைநீரை  முழுமையாக சேகரிக்கவும், நிலத்தடி நீர் மேம்படுத்தவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்அணையில் கிழக்கு, மேற்கு வாய்க்கால்களை  விரிவுப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்மூலமாக  கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், குளங்களில் நீர் நிரம்பும். பவானிசாகர்  அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்போது அந்த நீரை சேமிக்கும் வகையில்  தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணைக்கு  அருகிலும், பவானி ஆற்றிலும் 5 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கும் வகையில் 5  இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Stories: