ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் கடந்த 2018ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

Advertising
Advertising

இந்த வழக்கில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருந்த பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் இந்திராணி அப்ரூவராக மாறினார். இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த 21-ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிபிஐ தனது அடுத்தகட்ட விசாரணைக்காக ப.சிதம்பரத்திடம் உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றிய கே.வி.பெருமாளிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவரிடம், கார்த்திக் சிதம்பரம் உடனான தொடர்பில் இருந்தாரா, இந்திராணி முகர்ஜி உடனான தொடர்பில் இருந்தாரா என பல்வேறு சந்தேகங்களுக்காக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: