கனடாவை உலுக்கிய டோரியன் புயல்: 4.5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின

கனடா: கனடாவை தாக்கிய டோரியன் புயலால் 4 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. கரீபியன் தீவு-க்கு அருகே உருவான டோரியன் புயல் கடந்த சில நாட்களுக்கு முன் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாஸை தாக்கியது. இந்த புயல் அந்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும் டோரியன் புயலுக்கு பஹாமாஸிஸ் 43 பேர் பலியாகினர். இந்நிலையில் கனடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் ஹெலிபேக்ஸ் நகரின் நேற்று முன்தினம் இரவு டோரியன் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் சாலையில் இருந்த மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. வீட்டின் மேற்க்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலின் போது கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பின. புயலை தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து புயல் தாக்கிய சில மணி நேரத்தில் மட்டும் 100 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததாக கனடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே புயல் காரணமாக ஹெலிபேக்ஸ் நகரில் பல்வேறு இடங்களில்  பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. எனினும் டோரியன் புயலால் கனடாவில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது யாரும் காயமடைந்ததாகவோ இதுவரை தகவல்கள் இல்லை. அதே சமயம் புயல், மழை காரணமாக ஹெலிபேக்ஸ் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

Related Stories: