இந்தியாவிற்குள் ஒருவர் கூட சட்டவிரோதமாக குடியேற அனுமதிக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

திஸ்பூர்: இந்தியாவிற்குள் ஒருவர்கூட சட்டவிரோதமாக குடியேற அனுமதிக்க முடியாது என்றும் அதில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம்  கவுஹாத்திக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் தாஸ் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய  குடிமக்கள் பதிவேட்டில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து அமித்ஷாவிடம் விரிவாக பேசியதாக தெரிவித்தார். இந்தியாவிற்குள் ஒருவரை கூட சட்டவிரோதமாக குடியேற்றக் கூடாது என்பதில் அமித்ஷா உறுதியுடன் இருப்பதாகவும், அதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தம்மிடம்  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருப்பதாக ரஞ்சித் தாஸ் கூறினார்.

முன்னதாக அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியலில் 19 லட்சத்து  6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. எனவே இவர்கள் தங்களின் இந்தியர்கள் என்ற குடியுரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் யாரும் தற்போது கைது செய்யப்பட  மாட்டார்கள். அவர்கள் தங்களுக்கு உள்ள அனைத்து சட்ட வாய்ப்புகளை செய்து முடிக்கும் வரை எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்பட மாட்டாது என உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: