செண்பகத்தோப்பு அணையை சீரமைக்காவிட்டால் 25,000 விவசாயிகளுடன் உண்ணாவிரதம் இருப்பேன்: அதிமுக எம்எல்ஏ திடீர் அறிவிப்பு

கண்ணமங்கலம்: வரும் 20ம் தேதிக்குள் செண்பகத்தோப்பு அணையை தமிழக அரசு சீரமைக்காவிட்டால் 25 ஆயிரம் விவசாயிகளுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன் என கலசபாக்கம் அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம்  அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, அதிமுக ஆட்சியில் ₹34 கோடி மதிப்பில் செண்பகத்தோப்பு அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மதகுகளில் பொருத்தப்பட்ட ஷட்டர்கள் அமைக்கும் போதே  பழுதடைந்ததால், இன்று வரை அணை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை சீரமைக்குமாறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் பலனில்லை.இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 10 கோடி மதிப்பில் அணை சீரமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும்  பணிகள் தொடங்காததால் வேதனையடைந்த விவசாயிகளும், பொதுமக்களும், அணையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், `வரும் 20ம் தேதிக்குள் செண்பகத்தோப்பு அணையில் பழுதடைந்த ஷட்டரை சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் வரும் 21ம் தேதி 54  ஊராட்சிகளை சேர்ந்த 25 ஆயிரம் விவசாயிகளுடன் சேர்ந்து, படவேடு வீரக்கோயில் மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவேன்’’ என்று கூறியுள்ளார். அதிமுக அரசுக்கு எதிராக அக்கட்சி எம்எல்ஏவே போராட்டம் நடத்துவேன் என எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: