எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமனம்

சென்னை: எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக டி.லிங்கேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்,  சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு, நீதிபதியாக ஜெ.சாந்தி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்குகள் அதிகமாக இருப்பதால், மேலும் இரண்டு புதிய நீதிமன்றங்கள்  கடந்த ஜூலை மாதம் அமைக்கப்பட்டது.

அதற்கு முதல் அமர்வில் தலைமை நீதிபதியாக கருணாநிதி நியமிக்கப்பட்டார். இரண்டாவது நீதிமன்ற நீதிபதியாக முதல் அமர்வில் இருந்த ஜெ.சாந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். உதவி அமர்வு  நீதிமன்ற நீதிபதியாக சுரேஷ் பொறுப்பேற்று கொண்டார். இந்தநிலையில், முதல் அமர்வில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த கருணாநிதி பெரம்பலூர் மாவட்ட நிரந்தர லோக் அதாலத்தின் தலைவராக மாற்றப்பட்டுள்ளார். எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெரம்பலூர் மாவட்ட  நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.லிங்கேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: