‘மாதாவே வாழ்க, பசிலிக்கா வாழ்க’ என்று பக்தர்கள் கோஷம்: வேளாங்கண்ணியில் தேர் பவனி கோலாகலம்.. லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று மாலை தேர் பவனி கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பேராலயம், மாதா குளம், பேராலய கீழ்கோவில், மேல் கோவில், புனிதப்பாதை, விண் மீன் ஆலயம் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது. அந்தந்த மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நேற்று மாலை நடந்தது. இதையொட்டி மாலை 5.15 மணி அளவில் பேராலய கலையரங்கத்தில் தமிழில் செபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் செபம் நடைபெற்றது. பின்னர், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேசன்சூசை தலைமையிலும், பேராலய அதிபர் பிரபாகரன் முன்னிலையிலும் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதிரிமார்களும், அருட்சகோதரிகளும் பக்தர்களின் இருப்பிடத்திற்கே சென்று திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கினர். இதை தொடர்ந்து இரவு 7.30 மணி அளவில் பெரியத்தேர் பவனி நடைபெற்றது.

புனித ஆரோக்கிய மாதா பெரிய தேரில் எழுந்தருள, அதன் முன்பு 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருளினர். தேர்பவனி பேராலய முகப்பில் தொடங்கி கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக சென்று பேராலய முகப்பை மீண்டும் வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் ஒருசேர மரியே வாழ்க, மாதாவே வாழ்க, பசலிக்கா பசலிக்கா என்று பக்தி பரவசத்துடன் குரல் எழுப்பினர். பேராலய கோபுரங்களில் மின்விளக்குகள் எரிய விடப்பட்டது.

பல்வேறு நிறங்களில் ஒளிச்சிதறல் ஏற்பட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்னொளியில் ஜொலித்தது. இன்று மாலை 6 மணியளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆண்டுத் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜீலு தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: