பழநி அருகே அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ விழா: கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது

பழநி: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கருடாழ்வார், சங்கு, சக்கரம் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடி பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷத்துக்கு இடையே இன்று காலை 8 மணிக்கு கன்யா லக்னத்தில் கொடியேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினமும் சப்பரம், அனுமார் வாகனம், சிம்ம வாகனம், கருடன் வாகனம், அன்ன வாகனம் மற்றும் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழா முக்கிய நிகழ்ச்சியாக வரும் 14ல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்றைய தினம் மாலை 6.43 மணிக்கு மேல் 7.43 மணிக்குள் மீன லக்னத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்க உள்ளது. 15ம் தேதி இரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி 16ம் தேதி காலை 9 மணிக்கு துலா லக்னத்தில் நடக்க உள்ளது. 17ம் தேதி இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா நடைபெறும் 11 நாட்களும் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பாசுரங்கள் சேவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

Related Stories: