நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து கூட்டணி தலைமை முடிவெடுக்கும் : கே.எஸ்.அழகிரி தகவல்

நாங்குநேரி: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து கூட்டணித் தலைமை முடிவு எடுக்கும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், நாங்குநேரியில் நேற்று நடந்தது.  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்து பேசியதாவது: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பாரம்பரியமிக்க தொகுதி. இங்கிருந்து காங்கிரஸ் சார்பில் பல மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இல்லை. குமரி, கடலூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட வாரியாக தொண்டர்களின் மனநிலையை அறிந்து கொள்ள, கட்சியினரை ஊக்கப்படுத்தி புத்துணர்வு அளிக்க கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதுபோலவே இந்தக் கூட்டமும் நடத்தப்படுகிறது.

நாங்குநேரியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என இங்கு பேசிய அனைவரும் வலியுறுத்தினர். ஆனால் அதிமுக, பாஜ தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினருடன் பெரும்பாலும் கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக கூட்டணி தலைமையே இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் வழங்கியுள்ளது. எனவே நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி தலைமையே முடிவெடுக்கும் என்றார்.

Related Stories: