தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவல் விவகாரம் இயல்பு நிலைக்கு திரும்பியது கோவை: ரெட் அலர்ட் நீக்கம்.

கோவை: கோவையில் கடந்த நான்கு நாளாக இருந்த பதற்ற நிலை குறைந்தது.  இயல்பு நிலை திரும்பியதாக போலீசார் தெரிவித்தனர். கோவையில் கடந்த 22ம் தேதி 6 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் நாச வேலைக்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து நகரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. 3,500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  மாவட்டத்திற்கு ெரட் அலர்ட் விடப்பட்டது. இந்நிலையில், 5வது நாளான நேற்று கோவையில் பதற்ற நிலை மாறி இயல்பு நிலை திரும்பியது. செக்போஸ்ட்களில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தங்களது வழக்கமான பணிக்கு திரும்பினர்.

இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் நேற்று கூறியதாவது:கோவை நகரில் கடந்த 4 நாளாக நடந்த கண்காணிப்பினால் திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பினும், தற்போது 800 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து சீரமைப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ரெட் பீல்ட் பகுதியில் உள்ள விமானப்படை அலுவலகம் மற்றும் கப்பல் படை பள்ளிக்கூடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேதாரண்யம் சம்பவத்தை தொடர்ந்து நகரில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார். ஈரோடு: ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் கூறியதாவது:தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலின் பேரில் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தனியார் லாட்ஜ், ஓட்டல்களில், வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிக்கிய சந்தேக நபர்கள் சுமார் 400 பேரிடம் கைரேகை பதிவு, முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை சேகரித்த பின் விடுவிக்கப்பட்டனர். மாவட்டத்தில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை வழக்கமான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி முக்கிய கோயில்களில் போலீசார் வழக்கம் போல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: