திருவலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மதுகுடித்துவிட்டு போதை ஆசாமிகள் ரகளை: ஆபாச பேச்சுகளால் மாணவிகள், பொதுமக்கள் அச்சம்

திருவலம்: திருவலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு, அரசு அலுவலகங்களுக்கு அருகில் அமர்ந்து மது குடிக்கும் போதை ஆசாமிகளின் ஆபாச பேச்சுகளால் மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் சென்னை- சித்தூர் நெடுஞ்சாலையோரம் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் கிராம வருவாய் அலுவலர் அலுவலகம், தபால் நிலையம், வேளாண்மை வளர்ச்சி மையம், தனியார் வங்கி  ஆகியன அமைந்துள்ளது. பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலுள்ள பெட்டி கடைகளிலும், சாலையோரங்களிலும் அமர்ந்து குடிமகன்கள் மது அருந்துகின்றனர். அந்த பகுதி முழுவதும் திறந்தவெளி பார்களாகவே காட்சியளிக்கிறது. மேலும் குடிபோதை ஆசாமிகள் சிலர் தினமும் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசமாக பேசி வருகின்றனர். இதனால், பெண்கள் அச்சத்துடன் சென்று வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். அதோடு, சாலையோரங்களில் குடிமகன்கள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதாகவும், போதையில் வாகனங்களை ஓட்டுவதால் அதிகளவில் விபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும் பட்டப்பகலிலேயே நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை கண்டுகொள்ளாமல் திருவலம் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

எஸ்பி அலுவலகத்தில் ஆசிரியை புகார்: தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திருவலம் மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு  தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக கடந்த சில  மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதையடுத்து திருவலம் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதை ஆசாமிகள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் திருவலம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியை வேலூர் எஸ்பி அலுவலகத்துக்கு வந்து புகார் தெரிவித்தார். ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

Related Stories: