×

கடலூரில் உள்ளாட்சி தேர்தலுக்கு 3,538 வாக்குச்சாவடிகள் அமைப்பு : மாநில தேர்தல் ஆணையர் தகவல்

கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாதாரண உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி  தலைமையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பேசுகையில், சாதாரண உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஊரக பகுதிக்கு 2883 வாக்குச்சாவடிகளும், நகராட்சிக்கு 359 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சிக்கு 296 என மொத்தம் 3,538 வாக்குச்சாவடிகளும் அமைத்து வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்குச்சாவடிகள் அனைத்திலும் அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை வசதி, மின்சாரம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சாய்வு தளம் ஆகியவை அனைத்தும் உள்ளதை உறுதி செய்யவேண்டும். இதற்காக ஊரக பகுதிக்கு உதவி இயக்குநர் நிலையில் உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் நகர்புறத்திற்கு உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்), பேரூராட்சி செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் ஆய்வு செய்து இறுதி அறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நகர்புற தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், ஊரகப்புறம் தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறையும் பயன்படுத்தப்பட உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேவை குறித்தும், வாக்குச்சீட்டு முறைக்கான தேவையான வாக்குப்பெட்டிகள் இருப்பு மற்றும் தேவை குறித்தும் அறிக்கை அனுப்பி வைத்திட வேண்டும். மேலும் இருப்பில் உள்ள அனைத்து வாக்குபெட்டிகளையும் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன்,  மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள படிவங்கள் மற்றும் வாக்கு பெட்டிகளை மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார்.


Tags : 3,538 polling stations in Cuddalore: State Election Commissioner
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...