‘‘திருமணத்துக்கு முன் ‘ரிகர்சல்’ பார்க்கலாம் வா’’ : பாலியல் உறவுக்கு அழைத்த வாலிபரை தனியாக வரவழைத்து அடித்து உதைத்த இளம்பெண்

நாகர்கோவில் : தென்தாமரைக்குளம் அருகே, பாலியல் உறவுக்கு அழைத்த வாலிபரை, தனியாக வரவழைத்து இளம்பெண் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தென்தாமரைக்குளம் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர், அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஒரு வீட்டுக்கு வாழை குலை வாங்குவதற்காக அடிக்கடி செல்வது உண்டு. அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அந்த இளம்பெண்ணும் இவரிடம் சாதாரண முறையில் பழகி உள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு அடுத்த மாதம் திருமணமும் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தன்னிடம் சாதாரணமாக பழகிய இளம்பெண்ணை, அந்த வாலிபர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கினார். இளம்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்து கொண்ட அந்த வாலிபர், திடீரென இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, நான் உனக்கு நிறைய விஷயங்கள் சொல்லி தருகிறேன். திருமணத்துக்கு முன் ஒரு ரிகர்சல் (ஒத்திகை) பார்க்கலாம், நீ வருகிறாயா? என கேட்டுள்ளார். அந்த வாலிபர் எந்த நோக்கத்துடன் பேசுகிறார் என்பதை புரிந்து கொண்ட இளம்பெண் போனை துண்டித்து விட்டார்.

Advertising
Advertising

சாதாரணமாக பேசி, சிரித்ததை வைத்து தன்னை இப்படி தவறாக நினைத்து விட்டானே என்று அந்த வாலிபர் மீது ஆத்திரம் அடைந்தார். காவல் நிலையத்துக்கு செல்வதாலோ, உறவினர்களிடம் கூறுவதாலோ ஆத்திரம் அடங்காது. நேரடியாக வரவழைத்து நாமே அடித்து உதைத்து ஆத்திரத்தை தீர்க்க வேண்டும் என முடிவு செய்த அந்த இளம்பெண், வாலிபருக்கு போன் செய்து, தனியாக சந்திக்கலாம் என்றார். விரித்த வலையில் மான் மாட்டிக் கொண்டது. நமக்கு பெரிய வேட்டை தான் என்ற எண்ணத்தில், அந்த வாலிபரும் பழக்கடையை பூட்டி விட்டு நேராக இளம்பெண்ணை சந்திக்க சென்றார்.  தென்னந்தோப்புக்குள் வருமாறு, வாலிபரை இளம்பெண் அழைத்து சென்றார். வாலிபரும், அந்த ஆசையுடன் இளம்பெண்ணின் பின்னால் சென்றார். ஓரிடத்தில் நின்ற இளம்பெண், சிறிது நேரம் வாலிபரிடம் பேச தொடங்கினார். பின்னர் செல்போனில் வீடியோ பதிவு செய்தவாறு திடீரென பொங்கி எழுந்து, தனது அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபரை, இளம்பெண் சரமாரியாக அடிக்க தொடங்கினார். கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசினார். மிகவும் ஆவேசமாக பேசிய இளம்பெண் என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகிறது. உன் பொண்டாட்டியை இப்படி எவனாது கேட்டால் நீ சும்மா இருப்பீயா,  திருமணத்துக்கு முன் உன் பொண்டாட்டி இப்படி ரிகர்சல் பார்த்து இருந்தால் உனக்கு எப்படி இருக்கும். உன் மகள் அல்லது உன் தங்கையை இப்படி திருமணத்துக்கு முன் ரிகர்சல் பார்க்க அனுப்பி வைப்பீயா.... என  கேட்டு ஆவேசமாக தாக்கி கொண்டே வீடியோ பதிவும் செய்துள்ளார்.

இளம்பெண்ணின் அடி தாங்க முடியாமல், அந்த வாலிபர் ஓடுகிறார். ஆனால் விடாமல் துரத்தி, துரத்தி அடிக்கிறார். ரகசியமாக என்னிடம் அடி வாங்குகிறீயா, ஊரை கூட்டி அடி வாங்குகிறீயா? என கேட்டதும் ஓடுவதை நிறுத்தி விட்டு இளம்பெண்ணிடம், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நான் செத்து விடுவேன் என வாலிபர் கூறுகிறார். அதற்கு அந்த இளம்பெண் நீ செத்து போ, சாதாரணமாக பழகிய ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைக்கும் நீ உயிருடன் இருக்க கூடாது. ஒழுங்கு மரியாதையாக இரு, உனக்கு அப்படி பெண் சுகம் கேட்கிறதோ. இரு பெண் குழந்தைகளை வைத்துள்ள நீ, ஏன் இப்படி அலைகிறாய் என கூறியவாறு தாக்குகிறார். சுமார் 6 நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது. தற்போது சமூக வலை தளங்களிலும் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் இளம்பெண்ணின் முகம் பதிவாக வில்லை. வாலிபரின் முகம் தெளிவாக தெரிகிறது. தற்போது அந்த வாலிபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

Related Stories: