கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை தீர்ப்பில் இருந்து நீக்கினார் ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன்

சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என்ற கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ் பெற்றுள்ளது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை தீர்ப்பில் இருந்து ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் நீக்கினார். சென்னை கிறிஸ்துவ கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகார் வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பு கூறியிருந்தார். வழக்குக்கு தொடர்பில்லாத கருத்துக்கள் தீர்ப்பில் உள்ளதாக விமர்சனம் எழந்ததால் தீர்ப்பை நீதிபதி திருத்தினார். தீர்ப்பில் உள்ள சில கருத்துகளை நீக்க கல்லூரி நிர்வாகம் முறையீடு செய்ததை ஏற்று தீர்ப்பு திருத்தப்பட்டு உள்ளது.

சென்னை, தாம்பரம், கிறிஸ்தவ கல்லூரியின், விலங்கியல் துறை மாணவ - மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.  7 பேராசிரியர்கள் இவர்களை சுற்றுலா அழைத்து சென்றனர். கல்வி சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, இரண்டு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறினர்.

விசாகா கமிட்டியின் விசாரணையைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் பணிநீக்க நோட்டீஸ் அளித்தது. இதை எதிர்த்து பேராசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், கிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 32ஆவது பத்தி முழுவதுமாக நீக்கப்படுவதாக ஆணையிட்டார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டிருந்த வாசகமும் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: