மத உணர்வை தூண்டும் விதமாக பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்: போலீசாருக்கு கடிதம் மூலம் விளக்கம்

விருதுநகர்: மத உணர்வை தூண்டும் விதமாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அதற்கு அவர் கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அத்திவரதர் குறித்து கடந்த மாதம் 22ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சடகோபர் ராமானுஜ ஜீயர் கடந்த காலங்களில் இஸ்லாமியர்களுக்கு பயந்து அத்திவரதரை மறைத்து வைத்ததாகவும், தற்போது அத்தகைய சூழல் இல்லாததால் அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது என கூறியிருந்தார். இதை தொடர்ந்து அவருடைய  இந்த பேச்சானது மத உணர்வை தூண்டும் விதமாக உள்ளதாக கூறி இந்திய தவ்ஹீத் ஜமா அத்-தின் காஞ்சிபுர மாவட்ட செயலாளர் சையது அலி என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் வரும் 22ம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி ஜீயர் சடகோபர் ராமானுஜனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் ஜீயர் சடகோபர் ராமானுஜர் தரப்பில் கடிதம் ஒன்று காவல் நிலையத்துக்கு அனுப்பியுள்ளார். அதில் தாம் எந்த இடத்திலும் எந்த மதத்தையும் இழிவு படுத்துவது தனது நோக்கம் அல்ல எனவும், தேவைப்பட்டால் தான் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆதாரத்தை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: