கன்னியாகுமரி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து சென்ற பெண் மர்ம மரணம்: போலீசார் மீது உறவினர்கள் புகார்

கன்னியாகுமரி: காவல் நிலையத்தில் விசாரணைக்காக நள்ளிரவில் அழைத்து செல்லப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர். காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட லீலாபாய் ரத்த வாந்தி எடுத்ததாகவும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர் கூடங்குளம் அணுமின் வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் வீரராக பணிபுரிந்து வந்தார். சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இவர் மீது வள்ளியூர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் கிறிஸ்டோபர் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கிறிஸ்டோபர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கம்பியூர் பேரூராட்சி பூமாத்திவிளை காலனியை சேர்ந்த லீலாபாய் என்ற பெண்ணுடன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் கருங்கல் பூமாத்திவிளை காலனிக்கு சென்ற போது கிறிஸ்டோபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து லீலாபாயை வள்ளியூர் அனைத்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த நிலையில் தான் லீலாபாய் இரவில் ரத்த வாந்தி எடுத்ததாகவும், பின்னர் காவல்துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது லீலாபாய் இறந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே லீலாபாய் மீது எந்த புகாரும் இல்லாத நிலையில் போலீசார் எதற்காக நள்ளிரவில் விசாரணைக்கு அழைத்து செல்ல வேண்டும் என அவரது சகோதரர் ஜார்ஜ் கேள்வி எழுப்பிலுள்ளார். லீலாவின் சாவிற்கு போலீசாரே காரணம் என குற்றம் சாட்டிய அவர் இந்த மரணத்திற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: