அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என போர் மிரட்டல் விடுப்பது ஜனநாயகம் அல்ல: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளது ஆபத்தானது. போர் மிரட்டல் விடுப்பது ஜனநாயகம் அல்ல என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.சுதந்திர போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தி, ஜி.கே.மூப்பனார் ஆகியோர் பிறந்தநாள் விழா தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எஸ்.சத்தியமூர்த்தி, ஜி.கே.மூப்பனார் ஆகியோர் உருவப்படங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, துணை தலைவர் தாமோதரன், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.அகமது அலி, மகளிரணி தலைவி ஜான்சிராணி, மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் உள்பட காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி முப்படைகளுக்கும் ஒரே தளபதியை நியமிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரிய அடியாகும். ஏற்கனவே சிபிஐ, தகவல் அறியும் உரிமை ஆணையம், தேர்தல் ஆணையத்தை தங்கள் கையில் கொண்டு வந்த பாஜ, தற்போது முப்படைகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளது ஆபத்தானது. போர் மிரட்டல் விடுப்பது ஜனநாயகம் அல்ல.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் யார் போட்டியிடவேண்டும் என்பது குறித்து திமுகவுடன் பேசி முடிவு எடுப்போம். திமுகவை போன்று காங்கிரஸ் கட்சியினரும் அங்கு தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்கள். திமுகவுக்கு அந்த தொகுதியை விட்டுக்கொடுப்பது பற்றி கட்சியின் மேலிடம்தான் முடிவு எடுக்கும். எங்கள் கிராமத்தில் நாங்கள் நடத்தும் கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மாணவர் ஒருவர் வெளியேற்றம் செய்யப்பட்டார். அந்த மாணவர் கொடுத்த புகாருக்கு, கப்பல் துறை இயக்ககத்திற்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். மரைன் கல்லூரியில் 15 நாட்கள் பயிற்சி வகுப்புக்கு ₹8,000 தான் வசூலிக்கிறோம். அப்படியிருக்கும் போது மாணவர்களிடம் எப்படி ₹42 கோடி வசூல் செய்திருக்க முடியும். ₹42 கோடி கொடுத்தால் சந்தோஷம்தான்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: