ராமநதி அணையில் 80 அடி தண்ணீர் இருந்தும் கடையம் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு: பயிர்கள் கருகுவதால் தண்ணீர் திறக்க கோரிக்கை

கடையம்: கடையம் ராமநதி அணையில் 80 அடிக்கு தண்ணீர் இருந்தும் முறையான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராமநதி அணை உள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம்  ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் ஒரு லட்சத்திற்கும்   மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யபட்டு வருகிறது.தமிழகத்தில் கடந்த ஜூன் 28ம் தேதி தெற்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. மழை  சரிவர பொழியாததால் ராமநதி அணையில் கார்பருவ நெல் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இல்லை. இதனால் விவசாயிகள் கார்பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளாமல் நிலங்களை தரிசாக போட்டனர். கடந்த ஜூலை மாதம் கடைசியில் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்து ராமநதி அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதைதொடர்ந்து விவசாயிகள் சிறுகிழங்கு, மாட்டுக்கு தீவனத்திற்கு  தேவையான சோளதட்டை உள்ளிட்டவைகள் பயிரிட்டனர். தற்போது இவை தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி ராமநதி அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது. அணைக்கு  வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து வினாடிக்கு 5 கன அடி   தண்ணீர் மட்டுமே குடிநீருக்காக வெளியேற்றபடுகிறது. இந்த தண்ணீர் உறை கிணறுகள் இருக்கும் பகுதிக்கு வருவதில்லை. இதனால் தெற்கு கடையம் ஊராட்சி உள்ளிட்ட பல ஊராட்சிகளுக்கு தண்ணீர் வந்து 4 நாட்கள் ஆகின்றன. எனவே மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும். அணை முழுகொள்ளளவை எட்ட இன்னும் 4 அடி மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்தால் அணை விரைவில் நிரம்பும்  என எதிர்பார்க்கபடுகிறது.

Related Stories: