பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ஊக்குவிப்பு சலுகை அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவை 2024க்குள் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாகவும், 2032க்குள் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாகவும் உயர்த்தப்போவதாக மத்திய அரசு உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கும்  நிலையில், கள நிலையும், யதார்த்தமும் வேறுவிதமாக உள்ளன. இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அப்பட்டமாக அனைவருக்கும்  தெரிகிறது.இரு சக்கர வாகனங்களில் தொடங்கி மகிழுந்துகள், பேருந்துகள், சரக்குந்துகள் மற்றும் பல்வகை பயன்பாட்டு வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களின் விற்பனையும் கடந்த 9 முதல் 10 மாதங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் கடந்த சில வாரங்களில் மட்டும் 3 லட்சத்துக்கும் கூடுதலான பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் மேலும் 10 லட்சம் பேர் வேலையிழக்கும்  ஆபத்து நிலவி வருகிறது. இதைப் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

Advertising
Advertising

இத்தகைய நிலை நீடிக்குமானால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.நுகர்வை அதிகரிக்கும் வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலமாகத் தான் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும். குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்குவிப்பு சலுகைகளை அளித்தால் தான் இந்தியப்  பொருளாதாரத்தின் மந்த நிலையைப் போக்கி, அனைத்துத் துறைகளையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது சாத்தியமாகும்.மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைத்து அப்பொருட்களை அதிக அளவில் வாங்கச் செய்தல், ஏற்றுமதிக்கு சலுகைகளை அறிவித்து, அதிக அளவிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய வைத்து அன்னிய  செலாவணியை ஈட்டுதல், உட்கட்டமைப்புத் துறையில் மிக அதிக அளவில் முதலீடு செய்வதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்தல் உள்ளிட்ட ஊக்குவிப்பு சலுகைகள் தான் இன்றைய நிலையில் உடனடித் தேவையாகும்.எனவே, அத்தகைய ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்து, அனைத்து துறைகளுக்கும் புத்துயிரூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: