தமிழகம் முழுவதும் பணிமனைகளில் இயங்கும் தனியார் கேண்டீனில் விலை அதிகம்... உணவில் சுத்தமும் இல்லேப்பா!.. போக்குவரத்து தொழிலாளர்கள் குமுறல்

நெல்லை: தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள  அரசு போக்குவரத்து கழக பணிமனை கேன்டீனில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தவிர்க்க கேன்டீனை மீண்டும் போக்குவரத்து கழக நிர்வாகமே  நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், சேலம், மதுரை, நெல்லை உள்பட 8 கோட்டங்கள் மூலம் 24 மண்டலங்கள், 308 கிளை பணிமனைகள் மூலம் 23 ஆயிரத்து 78 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இவைகள் தவிர விரைவு போக்குவரத்து கழகம் மூலம் 2 ஆயிரம் பஸ்கள் நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள், டிரைவிங் இன்ஸ்பெக்டர்கள், செக்கிங் இன்ஸ்பெக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் சேவை மனப்பான்மையுடன் இயக்கப்பட்டு வருவதால் வருமானம் இன்றி நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ளது. அதிகாலையில் பணியை தொடங்கி இரவில் பணிமனை திரும்பும் தொழிலாளர்களுக்கு நல்ல தரமான உணவு வழங்க மோட்டார் வாகன சட்டப்படி பணிமனைகளில் கேன்டீன் வசதி இருக்க வேண்டும்.

ஆனால் பல அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் கேன்டீன்கள் இல்லாமல் இருந்தது. இதற்காக தொழிற்சங்கங்கள் கேன்டீன் வசதி கேட்டு போராட்டங்கள் நடத்திய பின் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 600 கிராம் சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியலுடன் உணவு வழங்கப்படும். தயிர் 1 கப் 25 காசு, காபி 30 காசு, டீ 15 காசு என தொழிலாளர்களுக்கு கேன்டீனில் வழங்கப்படும் என தொழிற்சங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அரசு மற்றும் தொழிற் சங்கங்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் போக்குவரத்து கழகங்கள் கேன்டீன் அமைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் ஒப்பந்தத்தின்படி பணிமனைகளில் கேன்டீன் அமைய வேண்டி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதன்பிறகுதான் போக்குவரத்து கழக பணிமனைகளில் கேன்டீன்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆனால் காலப்போக்கில் நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்து கழக நிர்வாகங்கள் கேன்டீன் நடத்துவதை கைவிட்டது. இதைத்தொடர்ந்து கேன்டீன்கள் தனியார் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தனியார் மூலம் நடத்தப்படும் கேன்டீன்களில் கோட்டத்துக்கு கோட்டம், மண்டலத்துக்கு மண்டலம், பணிமனைக்கு பணிமனைகளில் உணவு, டீ, காபி போன்றவற்றின் விலையில் ஏற்றத்துடன் மாற்றம் காணப்படுகிறது.

ஆனால் சுகாதாரமின்றி தரம் இல்லாத உணவு வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் புலம்பி தவிக்கின்றனர். ஆகவே தனியாரிடம் கேன்டீன்கள் தாரை வார்க்கப்பட்டதை தவிர்த்து மீண்டும் போக்குவரத்து கழகமே கேன்டீன்களை நடத்த வேண்டும்.

இதன் மூலம் பகல், இரவு பாராமல் ஓய்வின்றி உழைக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தரமான உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூறுகையில்; தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள கேன்டீன்கள் தனியாரிடம் உள்ளது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். சுவையின்றி சுகாதாரம் இல்லாத உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள்  வழங்கப்படுகின்றன. ஆகவே போக்குவரத்து கழகம் சார்பில் பணிமனை கேன்டீன்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: