செட்டிப்பட்டறை ஏரியில் குடியிருந்தவர்களுக்கு மாற்றுஇடம் தராமல் அலைக்கழிப்பு மழையினால் சிரமப்படும் மக்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பண்ருட்டி: பண்ருட்டி செட்டிப்பட்டறை ஏரியில் 300க்கு மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு நீதிமன்றம்,  நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் செட்டிப்பட்டறை ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அனைத்து வீடுகளும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மாற்று இடம் வேண்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரிடம் மனு அளித்தனர். ஆனால் ஓராண்டுகள் கடந்தும் இதுவரை மாற்று இடம் கொடுக்காமல் உள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், பண்ருட்டி- லிங்க் ரோட்டை விரிவு படுத்துவதற்காகவும், அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லிங்க் ரோடு பகுதியில் வசித்து வந்த 300க்கு மேற்பட்ட குடும்பங்களை வருவாய் துறையினர் மற்றும் நகராட்சியினர் அப்புறப்படுத்தி மாற்று இடமாக  செட்டிப்பட்டறை ஏரியில் குடி அமர்த்தினர். அதன்பிறகு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்தனர். கடந்த 35 ஆண்டுகளாக செட்டிப்பட்டறை ஏரியில் வசித்து வந்தோம். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி எங்கள் வீடுகள் இடிக்கப்பட்டது.

ஆனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்குவது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் இப்பகுதி இடிக்கப்பட்ட இடத்திலேயே கூடாரம் அமைத்து வசித்து வருகிறோம். குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு ஆகிய பிரச்னைகளால் கடந்த ஒரு ஆண்டாக சிரமப்பட்டு வருகிறோம். மேலும் குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க முடியவில்லை. மேலும் மழைக்காலம் தொடங்கி விட்டது. நேற்று முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதனால் மழையில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் நனைந்து படியே இருக்கிறார்கள். இதுவரை மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எந்தவித பாதுகாப்பு = ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதனால் தங்குவதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுகிறோம். திறந்த வெளியில் நாங்கள் இருப்பதால் கொசு தொல்லை காணப்படுகிறது. இதனால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் அச்சத்தில் இருக்கிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: