அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்க ஏற்பாடுகள் தீவிரம்; 253 பேருக்கு மட்டும் அனுமதி; புகைப்படம் எடுக்க அனுமதியில்லை

காஞ்சிபுரம்: அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் இறக்கும் நிகழ்வில் பங்கேற்க 253 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் பட்டாச்சாரியர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் என மொத்தம் 253 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 253 பேருக்கும் இன்று இரவு மட்டும் செல்லத்தக்க வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அத்திவரதரை குளத்தில் இறக்கும் நிகழ்வில் காவல்துறையினர் 1,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அத்திவரதரை குளத்தில் வைக்கும் போது வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது.  ஜூலை 31ம் தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிறைவுநாளான நேற்று வரை நின்ற கோலத்தில் அருள்பாலித்தார்.

இந்த வைபவம் தொடங்கிய நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். நேற்றுவரை 1.5 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். வைபவம் முடிந்துவிட்டதால் மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க வெளியே வருவார். இந்த நிலையில் வரதராஜபெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குள தண்ணீரில் அத்திவரதரை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அனந்தசரஸ் குளத்துக்கு ஒரு மாதம் பாதுகாப்பு

காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா கூறியதாவது: 48 நாள் அத்திவரதர் விழாவுக்கு ஒத்துழைப்பு தந்த அதிகாரிகள், மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அத்திவரதர் வைக்கப்படும் அனந்த சரஸ் குளத்துக்கு  ஒரு மாதம் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.  கோயில் வளாகத்தை சுற்றிலும் ஏற்கனவே 46 கேமராக்கள் உள்ளது. தற்போது குளத்தை சுற்றிலும் 10 கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் கிழக்கு கோபுரம்  மூடப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Related Stories: