மீன்வளம் பெருக வேண்டி கடல் அன்னைக்கு பால் ஊற்றி மீனவர்கள் சிறப்பு வழிபாடு

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையில் மீனவர்கள் தங்களுக்கு வாழ்வளித்துவரும் கடல் மாதாவிற்கு நன்றி செலுத்தும் வகையில் மீன்வளம் பெருக வேண்டி கடலில் பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

வேதாரண்யம் அருகே உள்ள மீனவர் கிராமமான ஆறுகாட்டுத்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ள நிலையில் மீன்பிடி தொழிலுக்காக 65 விசைப்படகுகளும், 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளை கடலுக்கு மீனவர்கள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாத கடைசியில் ஒருநாள் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து கடல் பூஜை செய்வார்கள்.

இந்த ஆண்டு இதேபோல் ஆறுகாட்டுத்துறையில் உள்ள மழை மாரியம்மன் ஆலயத்திலிருந்து மீனவர்கள் பால் குடம் எடுத்து வேலுடன் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரையை அடைந்தனர். பின்பு அங்கு கடல் மாதாவிற்கு ஏராளமான பழங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை நடத்தினர். பின்பு வேதை கடலில் நிறுத்தி கடல் அன்னைக்கு மீன் வளம் வேண்டி பால் ஊற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு மீன் நிறைய கிடைக்கவும் ஆபத்தின்றி மீன்பிடிதொழில் நடைபெறவும் பிரார்த்தனை செய்தனர்.

Related Stories: