வெள்ள நிவாரண பணிகளுக்கு 40 ஆயிரம் கோடி வேண்டும் : பிரதமரிடம் முதல்வர் எடியூரப்பா மனு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை  புனரமைப்பு  செய்வதற்காக ரூ.40 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும். இதில் 10  ஆயிரம் கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம் முதல்வர் எடியூரப்பா கோரிக்கை மனு கொடுத்துள்ளார். மாநிலத்தில்  மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் மேற்கொள்வதில்  தீவிரமாக இறங்கி செயல்பட்டு வந்த முதல்வர் எடியூரப்பா, சுதந்திர தின விழா  முடிந்த நிலையில் நேற்று காலை முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், முன்னாள்  துணைமுதல்வர் ஆர்.அசோக், முன்னாள் அமைச்சர் கோவிந்த கரஜோள் மற்றும் மாநில  அரசின் தலைமை செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் டெல்லி சென்றார். காலையில்  டெல்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு  சென்ற எடியூரப்பா தலைமையிலான குழுவினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து  மனு கொடுத்தனர்.

Advertising
Advertising

அதில், ‘‘கர்நாடக மாநில வரலாற்றில் எப்போதும்  இல்லாத வகையில் மிகப் பெரிய இயற்கை பேரழிவை மாநிலம் சந்தித்துள்ளது.  மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் 40 ஆயிரத்து 523 வீடுகள் இடிந்துள்ளன. 6  லட்சத்து 73 ஆயிரத்து 559 பேர் மீட்கப்பட்டு இதில் 3 லட்சத்து 93 ஆயிரத்து  956 பேர் ஆயிரத்து 224 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான  கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 17 மாவட்டங்களில் உள்ள 86 தாலுகாக்களில்  விவசாயிகள் பயிர் செய்துள்ள 4 லட்சத்து 30 ஆயிரத்து 953 ஹெக்டேர் பயிர்  முற்றிலும் சேதமடைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 64க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தால் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு  ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள குடும்பத்திற்கு  தலா ரூ.5 லட்சமும், வீடு இழந்துள்ளவர்கள் புதியதாக வீடு கட்டிக்கொள்ள ரூ. 5  லட்சமும் நிவாரணம் வழங்குவதாக மாநில அரசின் சார்பில் உறுதி  கொடுத்துள்ளோம். சேதமடைந்துள்ள வீடுகளை புதுப்பிக்க ரூ. 1 லட்சம், வீடு  இழந்தவர்கள் புது வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் தங்க மாதம் ரூ.5 ஆயிரம்  வாடகை வழங்குவது, மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தி  செய்து கொள்வதற்காக தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக  அறிவித்துள்ளோம். மாநிலத்தில்  வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ள மத்திய அரசின் சார்பில் ரூ.40 ஆயிரம் கோடி  நிவாரண நிதி வழங்க வேண்டும். அதில் முதல் கட்டமாக போர்க்கால அடிப்படையில்  ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்’’ என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Related Stories: