73வது சுதந்திர தினம்..: இந்தியாவின் பெருமையை கவுரவிக்கும் விதமாக சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்!

புதுடெல்லி: சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் பெருமையை கவுரவிக்கும் விதமாக கூகுள் தேடுதல் வலைத்தளம், சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 73வது சுதந்திர தினத்தை ஒட்டி, இந்தியாவின் பெருமையை கவுரவிக்கும் விதமாக அனைத்து துறையிலும் நாட்டின் கலாச்சாரங்களை சித்தரிக்கும் வகையில் டூடுலில் அறிவியல், கல்வி, கலை, சுற்றுச்சூழல், விளையாட்டு, வாகன போக்குவரத்து, தேசிய உயிரினங்கள் மற்றும் தேச ஒற்றுமை உள்ளிட்டவற்றின் படங்கள் அடங்கியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. டூடுலில் தேசியக்கொடி, செயற்றைக்கோள், நாடாளுமன்றம், ரயில் உள்ளிட்டவற்றின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், தேசிய விலங்கான புலி, தேசிய மலர் தாமரை மற்றும், கலைத்துறையை கவுரவிக்கும் வகையில் மயில் வண்ணம் தீட்டப்படுவது போன்றும், கல்வியை போற்றும் வகையில் கரும்பலகையில் எழுதும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுளின் இந்த வித்தியாசமான சிறப்பு டூடுல் சமூக வலைதளங்களில் அதிகமானவர்களால் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக, நாட்டின் 73வது சுதந்திர தினத்தை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை 7.30 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றினார். அத்துடன் நாடு முழுவதும் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். மேலும் நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் கலைகட்டி உள்ளது.

Related Stories: