இருதரப்பு வேறுபாடுகள் பிரச்னையாக மாறக்கூடாது: காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்ற சீனாவிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

பீஜிங்: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் நிலையில், அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என சீனா கூறியது. இதற்கு பதில் அளித்த இந்தியா,  ‘‘இருதரப்பு வேறுபாடுகள், பிரச்னைகளாக மாறக்கூடாது என்பதை உறுதி செய்வது முக்கியம்’’ என கூறி உள்ளது. பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஏற்கனவே தனிப்பட்ட முறையில் இரு முறை சந்தித்து இரு நாட்டு பிரச்னைகளுக்கு  சுமூக தீர்வு கண்டுள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் ஜின்பிங் மீண்டும் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச இந்தியா வரவுள்ளார். இந்த பயண திட்டத்தை உறுதி செய்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். அவர் சீன துணை அதிபர் வாங்க் கிஷானை சந்தித்து பேசினார். ஜெய்சங்கரை வரவேற்ற வாங்க் கிஷான், ‘‘நீங்கள் சீனாவில் இந்திய தூதராக நீண்ட காலம் பணியாற்றி, இருதரப்பு உறவை வளர்ப்பதில்  சிறப்பாக செயல்பட்டதை நான் அறிவேன். தற்போது நீங்கள் வெளியுறவுத்துறை அமைச்சராகியுள்ளதால், இருதரப்பு உறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்’’ என்றார்.

Advertising
Advertising

ஜெய்சங்கரின் இந்த பயணத்தில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை, ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது காஷ்மீரில் 370வது  சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது பற்றி நேரடியாக குறிப்பிடாமல் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் பற்றி கவலை தெரிவித்த வாங் யீ, ‘‘சீனாவும், இந்தியாவும் இரண்டு பெரிய நாடுகள். மண்டல அமைதி மற்றும்  நிலைத்தன்மையை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘சீன அதிபரின் இந்திய பயணத்தை உறுதி  செய்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். உலக அரசியலில் இந்தியா - சீனா இடையேயான உறவு தனித்துவம் வாய்ந்தது.

சர்வதேச அளவில் நிச்சயமற்ற நிலை நிலவும் நேரத்தில், இந்தியா - சீனா உறவுகள் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என அஸ்தானாவில் நடந்த சந்திப்பில் மோடியும், ஜின்பிங்கும் ஒருமனதாக முடிவு செய்தனர். இதை உறுதி செய்ய  நம்மிடையே உள்ள வேறுபாடுகள், பிரச்னைகளாக மாறக்கூடாது’’ என்றார். ஜெய்சங்கரின் சீன பயண திட்டம், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. ஜெய்சங்கரின் பயணத்துக்கு முன்பாக  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷி சீனா சென்று, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சீனாவின் ஆதரவை நாடினார். இதையடுத்து சீனா வெளியிட்ட அறிக்கையில், ‘‘லடாக் யூனியன்  பிரதேசமாக அறிவிக்கப்பட்டது, பிராந்திய இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காஷ்மீரில் தற்போதைய நிலவரம் கவலை அளிப்பதாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பாடுடனும், விவேகத்துடனும் செயல்பட  வேண்டும்’’ என கூறியிருந்தது.

இதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘‘இதர நாடுகளின் உள்நாட்டு பிரச்னை குறித்து இந்தியா கருத்து தெரிவிப்பதில்லை. இதே நிலைப்பாட்டை மற்ற நாடுகளிடம் இருந்து இந்தியா  எதிர்பார்க்கிறது’’ என பதில் அளித்திருந்தார். இந்நிலையில் ஜெய்சங்கரிடம், காஷ்மீர் விவகாரத்தை சீனா மறைமுகமாக எழுப்ப முயன்றது. ஆனால் அதை ஜெய்சங்கர் தனது பேச்சு திறமையால் வெற்றிகரமாக மடக்கி, காஷ்மீர் விவகாரத்தில்  சீனா மூக்கை நுழைக்காதபடி செய்துவிட்டார்.

Related Stories: