மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதா? போலி போலீஸ் கமிஷனரின் வீடியோவால் பரபரப்பு

மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும், யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் மும்பை போலீஸ் கமிஷனர் பெயரில் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை போலீஸ்  கமிஷனர் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஆசாமி ஒருவர் நேற்று வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில், ‘‘மும்பையில் தாக்குதல் நடக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள், வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம். ரயில் நிலையங்கள்,  பார்கள், சினிமா தியேட்டர்கள், ஆடிட்டோரியம் உட்பட அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதனால், மும்பை மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த வீடியோவில்  பேசியிருந்தது மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பர்வே கிடையாது என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் பெயரில் யாரோ விஷமி இந்த வீடியோவை பரவவிட்டுள்ளார். வீடியோவில் மும்பையில் தாக்குதல் நடக்கும்  வாய்ப்பு இருப்பதாக அதில் பேசிய நபர் மராத்தியில் தெரிவித்துள்ளார்.

‘‘காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இருப்பதால் பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனமும் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும். நாட்டின் 19 நகரங்களை குறிவைத்துள்ளனர். எல்லையில் நமது  நாட்டை பாதுகாத்துக்கொள்ளும் திறமை நமக்கு இருக்கிறது. ஆனால் வெடிகுண்டு போன்ற தாக்குதலில் ஈடுபட்டால் மிகவும் கஷ்டம். அதனை அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்த முடியாது. எனினும் மக்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.  ஆனால் பக்கத்து நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்’’ என்று அந்த ஆசாமி வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோவில் தெரியும் உருவம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஹேமந்த் மகாஜனுடையது  என்று தெரியவந்துள்ளது. ஹேமந்த் மகாஜன், கடந்த 8ம் தேதி வீடியோ ஒன்றை யூ டியூப்பில் வெளியிட்டார்.

அதில், ‘‘மக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது வீடியோவை எடிட் செய்து அதில் மாற்றங்களை செய்து மர்ம நபர் மறுபதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவை பலர் தங்களுக்கு  தெரிந்தவர்களுக்கு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக  கருதப்படுவதால் ரயில் நிலையங்கள் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடல் வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதால் கடற்படை  மற்றும் கடலோர காவல் படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: