இலங்கையில் அதிபர் பதவிக்கு ராஜபக்சேயின் தம்பி போட்டி

கொழும்பு: இலங்கையில் எஸ்எல்பிபி கட்சியின் அதிபர் வேட்பாளராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபயே ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், அதாவது டிசம்பர் 8ம் தேதிக்கு முன்னதாக அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், சட்ட விதிகளின் படி முன்னாள் அதிபர் ராஜபக்சே போட்டியிட முடியாது. அவர் ஏற்கனவே இரண்டு முறை அதிபராக பதவி வகித்துவிட்டார். இதனால், ராஜபக்சேயின் லங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் (எஸ்எல்பிபி) அதிபர் வேட்பாளராக தனது இளைய சகோதரர் கோத்தபயே ராஜபக்சேயின் பெயரை அவர் அறிவித்துள்ளார். எஸ்எல்பிபி.யின் மாநாடு கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் புதிய கட்சியின் தலைமை பொறுப்பை ராஜபக்சே ஏற்றார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ‘‘எனது சகோதரர் கோத்தபயே ராஜபக்சேயை கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கிறேன். எனது சகோதரர் இனி உங்களது சகோதரர். நமக்கு ஒழுக்கம் மற்றும் சட்டம் நிலைநிறுத்தப்படவேண்டும். அதற்கு கோத்தபயே தகுதியானவர்” என்றார்.

Advertising
Advertising

இதுகுறித்து கோத்தபயே கூறுகையில், “நாட்டுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். உங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு நான் உறுதி அளிக்கிறேன். இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டேன். எனது கடமையை சிறப்பாக செய்வேன்” என்றார். கோத்தபயே ராஜபக்சே இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர். இலங்கை ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். அதன் பின்னர் கடந்த 1992ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். இவர் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமையை பெற்றவர். கடந்த 2 வாரத்துக்கு முன் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார். இவர் மீது இலங்கை நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Related Stories: