*ஒளிரும் சிவப்பு பட்டையில் வைக்கப்படுமா?
நத்தம் : நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலை பணிக்காக ஊர் பெயர் பலகைகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் திண்டாடி வருகின்றனர். எனவே ஒளிரும் சிவப்பு பட்டைகளில் ஊர் பெயர்களை வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. நத்தத்தில் இருந்து மதுரைக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.900 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியிலிருந்து ஊமச்சிகுளம் வரை பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஊமச்சிகுளத்தில் இருந்து நத்தம் சேர்வீடு விலக்கு வரை நான்கு வழிச்சாலை அமையவுள்ளது. இப்பணிக்காக அந்தந்த ஊர்களின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு விட்டது. இதனால் நத்தம்- மதுரை இடையே இருமார்க்கத்தில் சென்று வரும் பயணிகள் எந்த ஊர், எங்கு உள்ளது என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் அப்பகுதிகளுக்கு ரெகுலராக சென்று வரும் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கே ஊர்கள் தெரியாமல் போய் விடுகிறது. இதனால் இறங்க வேண்டிய ஊர்களின் பஸ் நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் சென்று நிறுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அன்றாடம் பயணிகளுக்கும், பஸ் கண்டக்டருக்கும் பிரச்னை ஏற்பட்டு மோதல் வெடித்து வருகிறது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஊர்களின் விலக்கு பகுதிகளை ஆய்வு செய்து சாலையின் ஓரமாக ஒளிரும் சிவப்பு பட்டைகளில் ஆன பெயர் பலகைகள் வைக்க வேண்டும். அப்போதுதான் பஸ்சில் பயணம் செல்பவர்கள் பயனடைவதுடன், வெளியூர் வாகனஓட்டிகளும் குழப்பமின்றி செல்ல ஏதுவாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.