ஆக.1-ல் இருந்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்: அத்திவரதரை தரிசித்தப்பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

காஞ்சிபுரம்: அத்திவரதரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த வைபவம்  தொடங்கியதில் இருந்து அத்திவரதர் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார். இந்நிகழ்வில் ஜனாதிபதி, கவர்னர், மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற  நீதிபதிகள், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் என ஏராளமானோர் நாள்தோறும் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும்  பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமை செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ள நிலையில்,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 8 மணியளவில் அத்திவரதரை தரிசனம் செய்தார். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பட்டாச்சாரியர்கள் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், அத்திவரதரை தரிசிக்க வரும்  பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட அலுலவகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

நேற்று வரை முதல்வர் வருகையை ரகசியமாக வைத்திருந்த நிலையில், இன்று காலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி தேன்மொழி, காஞ்சிபுரம் எஸ்பி கண்ணன் தலைமையிலான  போலீஸ் அதிகாரிகள் கோயில் வளாகம், சுற்று வட்டார பகுதிகள், செட்டித்தெரு, ரங்கசாமி குளம், டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பழனிசாமி பேட்டி:

அத்திவரதரை தரிசனம் செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2,600 மீட்டர் நிளத்திற்கு பக்தர்கள் அமர நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 8000 நபர்கள் நின்று செல்ல பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.  மூத்த குடிமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22.07.2019 நேற்று வரை சுமார் 30.50 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு காவல்துறை  தலைவர், துணை தலைவர், 7 காவல் கண்காணிப்பாளர்கள், 8 காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், 40 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 98 காவல் ஆய்வாளர்கள், 3000 காவலர்கள் தினந்தொரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அத்திவரதர் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்றும் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி  தருவார் என்றார்.

Related Stories: