மேச்சேரி அருகே குழாயில் உடைப்பு... தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகும் அவலம்

மேச்சேரி: மேச்சேரி அருகே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேச்சேரி அருகே காமனேரி கிராமத்தின் வழியாக, மேட்டூரில் இருந்து ஆத்தூர் வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இந்த பிரதான குழாய் மூலமாக சேலம் மாநகர் மற்றும் ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், காமனேரி கிராமத்தின் வழியாக செல்லும் குடிநீர் வடிகால் வாரிய பிரதான பைப் லைன் உடைத்துள்ளது. இதனால், அந்த குழாயில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பீய்ச்சி அடித்தவாறு வெளியேறி வீணாகி வருகிறது. அதிக அளவிலான தண்ணீர் வெளியேறி தேங்கி கிடப்பதால், காமனேரி மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் சாலை பழுதடைந்து வருகிறது.

தற்போது, மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்த அளவே உள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, மேச்சேரியில் தண்ணீர் வீணாவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தண்ணீர் வெளியேறுவதை தடுக்கக்கோரி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருகிறது,’ என்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஒருசில இடங்களில் பைப்லைன் உடைந்துள்ளது. அவற்றை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அவ்வாறு பணிகளை சரிசெய்ய பைப்லைனில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு வெளியேறும் தண்ணீரே ரோட்டில் செல்கிறது. உடைப்பினை சரி செய்ததும் தண்ணீர் முறையாக ஆத்தூர் வரை செல்லும்,’ என்றனர்.

Related Stories: