இந்திய கடற்பகுதிக்குள் எல்லை மீறுகிறது இலங்கை கடற்படை?

* ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்

* புலனாய்வுத்துறை விசாரணை
Advertising
Advertising

ராமேஸ்வரம்: இந்திய கடல் பகுதிக்குள் தனுஷ்கோடி அரிச்சல்முனை மணல் திட்டுக்கள் வரை இலங்கை கடற்படையினர் படகுகளில் வந்து செல்வதாக மீனவர்கள் தரப்பில் தகவல் பரவியதால் புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்தியா - இலங்கை இருநாடுகளுக்கு இடையேயான கடல் எல்லைக்கோடு தனுஷ்கோடி கடலில் அமைந்துள்ள ஆறாவது மணல் திட்டுடன் முடிகிறது. அரிச்சல்முனை கடலில் முதலாம் மணல் திட்டு முதல் ஐந்தாம் மணல் திட்டு வரை இந்திய கடல் பகுதி என்றும், ஏழாவது மணல் திட்டு முதல் தலைமன்னார் வரை இலங்கை கடல் பகுதி என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.இரண்டுக்கும் இடையிலுள்ள ஆறாவது மணல் திட்டு கடல் பகுதி இருநாட்டிற்கும் பொதுவானதாக கருதப்படுகிறது. இதனால் இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மரைன் போலீசார் ஆறாவது மணல் திட்டு கடல் பகுதி வரை ரோந்து சென்று திரும்புவது வழக்கம். இதுபோல் இலங்கை கடற்படையினரும் ஆறாவது மணல் திட்டு கடல் பகுதி வரை வந்து செல்வர்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தனுஷ்கோடி வரை இலங்கை கடற்படை வந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.இரவு நேரத்தில் கன்போட் கப்பல் மற்றும் சிறிய பைபர் கிளாஸ் படகுகளில் ரோந்து வரும் இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல்பகுதி வரை வருவதாகவும், அந்த நேரத்தில் நாட்டுப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து செல்போன், மீன்பிடி உபகரணங்களை பறித்து செல்வதாகவும் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஒளிமிகுந்த சர்ச் லைட்டை எரிய விட்டுக்கொண்டு வரும் இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் பொருட்களை பறித்து செல்வதுடன், எதிர்த்துப்பேசும் மீனவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இலங்கை கடல் பகுதிக்குள் மீனவர்கள் வந்து விட்டதாகக்கூறி மீன்பிடிக்க விடாமல் அடித்து விரட்டுவதாகவும் கூறப்படுகிறது.இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்வதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை மணல் திட்டுகள் வரை வந்து செல்வது குறித்து மீனவர்கள் தரப்பில் இருந்து தகவல் கிடைத்தால் மத்திய, மாநில புலனாய்வு துறையினர் நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுககு தெரிவித்ததுடன், இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: