தெலங்கானாவில் தாக்கப்பட்ட பெண் வன அதிகாரி மீதான வன்கொடுமை வழக்குக்கு தடை

புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் தாக்கப்பட்ட பெண் வன அதிகாரி அனிதா மீது வன்கொடுமை  எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் தடை  விதித்துள்ளது. தெலங்கானா மாநிலம், ஆசிபாபாத் மாவட்டம்,  காகஸ்நகர் மண்டல வன அதிகாரி அனிதா, வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு  நிலத்தை மீட்க மரக் கன்றுகளை நட வனத்துறை ஊழியர்களுடன் சமீபத்தில் சென்றார். அங்கு சென்ற ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியை சேர்ந்த சிர்கூர் தொகுதி  எம்எல்ஏ கொனேறு கண்ணப்பாவின் சகோதரர் கிருஷ்ணா ராவ், தனது அடியாட்களுடன்  வனத்துறை ஊழியர்களை கம்பால் அடித்து விரட்டினார். இதில், அனிதா  கடுமையாக தாக்கப்பட்டார். இந்த வழக்கில் கிருஷ்ணா ராவ் உள்பட 16 பேர் கைது  செய்யப்பட்டனர். இதையடுத்து, ஜூலை 8ம் தேதி சிர்சலா கிராமத்தில்  வசிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்  அடிப்படையில், அனிதா மற்றும் வனத்துறை ஊழியர்கள் 15 பேர் மீது  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை எதிர்ப்பு  சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு  நீதிபதிகள் அருண் மிஸ்‌ரா, தீபக் குப்தா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு  வந்தது. அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தொடர்பான வழக்குகளில்  நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ராவ், ``இதே போன்று  மகாராஷ்டிராவிலும் பணியில் இருந்த வனத்துறை அதிகாரி கும்பலால்  தாக்கப்பட்டார். இது தொடர்பாக இரண்டு மாநில அரசுகளும் எடுத்த நடவடிக்கை  குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், என்று  கோரினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், தாக்கப்பட்ட  அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி  எழுப்பினர். பின்னர், அனிதா உள்ளிட்டோர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது பற்றி அறிக்கை அளிக்கும்படி தெலங்கானா தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அனிதா மீதான வன்கொடுமை வழக்கிற்கு  தடை விதித்தனர். மேலும், விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

>