ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு 2 இடங்களில் பணிகள் வாபஸ்: விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன்  எடுக்கும் நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் நேற்றும் தொடர்ந்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி 2 இடங்களில் குழாய்பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதை மீறி இந்த திட்டத்தை தொடங்குவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் சண்முகம் அறிவித்தார். ஆனால் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகில் பெரியகுடி, சோழங்கநல்லூர் ஆகிய இடங்களில் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் 4 பேர் பங்கேற்றனர். நள்ளிரவு வரை நடந்த கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதனால் நேற்று காலை ஏராளமான விவசாயிகள் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து, ஆர்டிஓ புண்ணியகோட்டி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  2 இடங்களில் பணிகள் வாபஸ்: பேச்சுவார்த்தையில், கோட்டூர் அருகே பெரியகுடி, சோழங்கநல்லூர் ஆகிய 2 கிராமங்களில் நடைபெற்ற பணிகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறினர். இதனைதொடர்ந்து 2 இடங்களிலும் நடைபெற்று வந்த எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிப்பதாக ஆர்டிஓ கூறினார். இதையடுத்து 2 இடங்களிலும் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்படுகிறது என ஓஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அளித்த உறுதியின்பேரில் காத்திருப்பு போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். கோரிக்கை நிறைவேறியதை தொடர்ந்து விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Related Stories: