கம்பம் நகராட்சி பெயரில் தனியார் அடாவடி வசூல்... பொதுமக்கள் அதிருப்தி

கம்பம்: கம்பம் நகராட்சி பெயரில் வீடு தோறும் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கம்பம் நகரில் அடிப்படை வசதிகள் அதிகளவில் செய்யப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் கம்பம் நகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் சென்ற திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்ட தனியார் தொண்டு நிறுவனம், கதவு எண் பொருத்துவதாக கூறி ரூ.50 கட்டாய வசூல் செய்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தட்டிக்கேட்டால் நாங்கள் நகராட்சி அதிகாரிகளின் அனுமதியுடன் தான் வருகிறோம் என்று கூறுகின்றனர். வீட்டின் முன்பக்க கதவிற்கு பக்கத்தில் இந்த கதவு எண் பிளாஸ்டிக் அட்டையை பொருத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனை பொருத்த வேண்டாம் என மக்கள் கூறினாலும் கதவுஎண் அட்டையை பொருத்திவிட்டு செல்வது கடந்த 1 வாரமாக நடக்கிறது. இப்படி அடாவடியாக கதவு எண் பொருத்துவது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால் அப்படி இல்லை என்கின்றனர்.

இதுகுறித்து அபு என்பவர் கூறுகையில், கம்பம் நகரில் 15 நாட்களாகவே இந்த கதவு எண் அட்டையை பொருத்தும் பணி நடக்கிறது. இதனை வேண்டாம் என சொன்னாலும் வீடு ேதாறும் கட்டாயப்படுத்தி ரூ.50 வசூல் செய்கின்றனர். தனியார் நிறுவனத்தின் பணியாளர்களிடம் கேட்டால், வீட்டின் முன்பு இந்த பலகை இருந்தால்தான் அதிகாரிகள் பார்ப்பதற்கு மிக இலகுவாக இருக்கும் என கட்டாயப்படுத்துகின்றனர். ஏற்கனவே வீட்டின் முன்பு டோர் நம்பர், குடிநீர் இணைப்பு, மின்இணைப்பு எண் போன்றவை எழுதி வைத்திருந்தாலும், கட்டாயம் 50 ரூபாய் தந்து பிளாஸ்டிக் அட்டையை பொருத்தி விட்டுச் செல்கின்றனர்’’ என்றனர். இதுகுறித்து நகராட்சி பொறியாளர்(பொறுப்பு) செல்வராணியிடம் கேட்டபோது, `` நாங்கள் யாருக்கும் முறையான அனுமதி கொடுக்கவில்லை. தொண்டு நிறுவனம் எங்களிடம் கேட்டதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் நீங்கள் கதவுஎண் பலகையை வீடுகளில் ஒட்டலாம் என்றோம். ஆனால், அவர்கள் கட்டாயப்படுத்தினால் இந்த நிறுவனத்தை இனிமேல் எந்த குடியிருப்புகளுக்கும் செல்லக்கூடாது என சொல்லி விடுகிறோம்’’ என்றார்.

Related Stories: