தோகைமலை அருகே டாக்டர் இல்லாததால் சோகம்: செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு

தோகைமலை: தோகைமலை அருகே செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தது. இதனால், உறவினர்கள் அரசு துணை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த நாகனூர் மேட்டுபிள்ளையார் கோயில் மேற்கு பகுதியில் வசிப்பவர் சரவணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (26). இவர் நிறைமாத கர்ப்பிணி. கடந்த 14ம் தேதியன்று தோகைமலையில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்திற்கு பிரசவம் பார்க்க சென்றுள்ளார். அங்கு 2 நாட்கள் தங்கி சிகி்ச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் ராஜேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ராஜேஸ்வரிக்கு அங்குள்ள செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில் பிறந்த ஆண் குழந்தை சிறிது நேரத்தில் மூச்சு திணறி இறந்துள்ளது. இதை மறைத்த அங்குள்ள செவிலியர்கள், அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரவு 7 மணியளவில் ராஜேஸ்வரி கணவர் மற்றும் உறவினர்களிடம், குழந்தைக்கு அதிக மூச்சு திணறல் ஏற்படுகிறது என்றும், இதற்கான கருவி ஏற்கனவே கருகி விட்டதால், நீங்கள் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை அளித்துக்கொள்ளுங்கள் என்று 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சென்ற ராஜேஸ்வரியும், பிறந்த குழந்தையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், ‘‘குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது. ஏன் இவ்வளவு சிரமமப்பட்டு இங்கு கொண்டு வந்தீர்கள்?’’ என்று ராஜேஸ்வரி உறவினர்களை திட்டிவிட்டு, ‘‘நீங்கள் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தாயை தோகைமலை துணை சுகாதார நிலையத்திற்கே அழைத்து சென்று சிகிச்சை அளியுங்கள்’’ என்று அதே 108 ஆம்புலன்சில் தோகைமலைக்கு அனுப்பினர். இதைக்கேட்ட ராஜேஸ்வரியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, மீண்டும் ராஜேஸ்வரியை தோகைமலை அரசு துணை சுகாதார நிலையத்தில் அனுமதித்துவிட்டு, குழந்தையை அடக்கம் செய்தனர். பின்னர், துணை சுகாதார நிலையத்திற்கு வந்த ராஜேஸ்வரி உறவினர்களிடம், அங்குள்ள செவிலியர்கள், ராஜேஸ்வரிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. நீங்கள் அவரை உடனடியாக திருச்சி ஆஸ்பத்திரிக்கோ அல்லது மணப்பாறை ஆஸ்பத்திரிக்கோ கொண்டு சென்று சிகிச்சையளியுங்கள் என்றனர்,

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள், ‘‘மருத்துவர் இல்லாமல் நீங்களே பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்ததை மறைத்து எங்களை அலைக்கழிக்கிறீர்கள்’’ என்று ராஜேஸ்வரியின் உறவினர்கள் தோகைமலை அரசு துணை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த குளித்தலை டிஎஸ்பி சுகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து, முதலில் தாய்க்கு முறையான சிகிச்சை அளித்து காப்பாற்றுங்கள், அதனால் அவரை உடனடியாக மணப்பாறை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள், குழந்தை இறந்தது குறித்து உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதையடுத்து ராஜேஸ்வரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். நேற்றிரவு முழுவதும் குழந்தை இறந்ததை சொல்லாமல், தாயை 108 ஆம்புலன்ஸில் அலைக்கழித்த சம்பவம் தோகைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: