கலெக்டர் அலுவலக காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு... தூத்துக்குடிக்கு மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய்

புதுக்கோட்டை: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடியில் இயங்கும் தனியார் நிறுவனத்திற்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தூத்துக்குடி ஒன்றியம், வைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உட்பட்ட குலையன்கரிசல், பொட்டல்காடு கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்தனர். மேலும் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய்களை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால், இவற்றின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஜூலை 17ல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.இதையடுத்து கடந்த 2 நாட்களாக சமாதான கூட்டம் நடந்தது. தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த சமாதான கூட்டத்தை தொடர்ந்து 2வது நாளாக நேற்று குலையன்கரிசல் கிராமத்தில் பஞ்சாயத்து அருகே நடந்த சமாதான கூட்டத்திற்கு தூத்துக்குடி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் தலைமை வகித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முதன்மை கட்டுமான மேலாளர் முருகேசன், கட்டுமான மேலாளர் ரமேஷ் பாபு, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நில எடுப்பு துணை கலெக்டர் மகேஷ்வரன், வருவாய் ஆய்வாளர் மரிய வியாகுல ஜெயா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் சங்கரன், நம்பிராஜன், விவசாயிகள் ஆஸ்கர், ஜெகன், பால்குட்டி, சதானந்த ராஜ், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் கொண்டு செல்வதற்குப் பதிலாக மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன விவசாயிகள், மாற்றுப்பாதையில் கொண்டு செல்லுமாறு தொடர்ந்து வலியுறுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிப்பது குறித்து பரிசீலிப்பதாக உறுதிமொழி அளித்தனர். மேலும், மாற்றுவழி பாதை தொடர்பாக நேரடி பார்வையிட்டு ஆய்வறிக்கையை கலெக்டரிடம் வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று அறிவித்த காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் மாற்றுப்பாதை தொடர்பாக ஆய்வு நடத்தினர். 48 கண்மாய் கரையோரமாக உப்பாற்று ஓடை வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: