வேலூர் மக்களவை தேர்தலையொட்டி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்கள் 1,233 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: கலெக்டர் அதிரடி

வேலூர்: வேலூர் மக்களவை தேர்தலையொட்டி பயிற்சிக்கு வராத 1233 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் அறிவித்தவுடன்  அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.  இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 690 இடங்களில் 1553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பணிபுரிய வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களும் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் 7 ஆயிரத்து 557 அலுவலர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தனர். இதற்கான கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சி கடந்த 14ம் தேதி நடந்தது. மாவட்டம் முழுவதும் 6  பயிற்சி மையங்களில் வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கான பயிற்சி நடத்தப்பட்டது. இதில் அனைத்து அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. ஆனால் இப்பயிற்சியில் 1233 அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, 1951ன் கீழ் விளக்கம் கேட்டு 1233 அரசு ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஏற்கத்தக்க காரணம் இல்லாமல் பயிற்சி வகுப்புக்கு வராதவர்களுக்கு பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தனியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பயிற்சியில் கலந்து கொள்ளாத 1233 அரசு ஊழியர்களுக்கும் வரும் 18ம் தேதி சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆணை அரசு ஊழியர்களுக்கு நேற்று முதல் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளாத அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் வேட்பு மனு கேட்டு தர்ணா

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நேற்று முன்தினம் வரை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 18 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 4ம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருபவர்கள் எண்ணிக்கை 3 ஆக குறைந்தது. இவர்களையும் சேர்த்து 21 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். இதற்கிடையில், நேற்று மதியம் 12 மணியளவில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் செல்லபாண்டியன் விண்ணப்ப படிவம் வாங்கினார். அது ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததால் ‘தமிழில் தான் படிவம் வழங்க வேண்டும்’ எனக்கூறி ‘தமிழ் வாழ்க’ என முழக்கமிட்டபடி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் ‘நீங்களே தமிழிலும் விண்ணப்பத்தை தயார் செய்து தாக்கல் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினர்.

Related Stories: