கீழடியை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயில் அருகே மத்திய தொல்லியல் அதிகாரி திட்டத்துக்கு மாநகராட்சி அனுமதி மறுத்தது அம்பலம்

மதுரை: கீழடியில் அகழாய்வு நடத்திய மத்திய தொல்லியல் துறை அதிகாரி, தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அகழாய்வு நடத்த திட்டமிட்டு, அதற்கான அனுமதி கோரி மாநகராட்சிக்கு 2 முறை கடிதம் எழுதியது. இதற்கு மாநகராட்சி எந்தவித பதிலும் அனுப்பாமல் மவுனம் சாதித்துவிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மதுரை நகரில் இருந்து 30 கிமீ. தொலைவிலுள்ள கீழடியில் 2015ல் மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் முதன்முதலில் ஆய்வு நடத்தி, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தார். மேலும் 700க்கும் மேற்பட்ட பொருட்களை எடுத்து இந்தியாவில் தமிழர் நாகரீகமே தொன்மையானது என்பதை வெளிக்கொண்டு வந்தார். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த அகழாய்வில் கண்டறிந்த ஆதாரங்கள் அடிப்படையில் புராதன நகரமான மதுரைக்கும் எந்த மாதிரி தொடர்பு இருக்கிறது? என்பதை அறிய விரும்பினார். அதோடு மதுரை நகரின் தொன்மையை கண்டறிந்து வெளிக்கொண்டு வரும் நோக்குடன் மீனாட்சியம்மன் கோயில் அருகிலுள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் தோண்டி அகழாய்வு நடத்த திட்டமிட்டார். இதற்காக மாநகராட்சிக்கு 2 முறை கடிதம் எழுதினார். அதற்கு மாநகராட்சி பதிலே அளிக்காமல் மவுனம் சாதித்தது. தொடர்ந்து அப்போதைய மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க முயற்சி மேற்கொண்டார். அதற்குள் அவரை மத்திய அரசு அதிரடியாக மாற்றம் செய்து விட்டது. அந்த அதிகாரி அகழாய்வு நடத்த திட்டமிட்டு முடியாமல் முடங்கிய, அதே இடத்தில் தான் தற்போது மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடியில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுகிறது. இதற்காக கோயில் அருகில் அண்டர் கிரவுண்ட் தோண்டக்கூடாது என்ற விதிமுறையை மீறி தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்று பூமியை தோண்டி, அண்டர் கிரவுண்ட் உருவாக்குகிறது.

இப்பணிக்காக தோண்டிய போது, 2 நாட்களுக்கு முன் ஒரு கல் தூண் மற்றும் புராதன சுவர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொல்லியல் துறை ஆய்வு செய்து, சாதாரண கல்தான் என்று சொல்லி விட்டது. எனினும் ராணி மங்கம்மாள் அரண்மனை மற்றும் சிறைச்சாலைப்பகுதி இருந்த இந்த இடத்தில் அகழாய்வு நடத்தப்பட்டால் பல்வேறு அரிய தொன்மை அடையாளங்களை நிச்சயம் கண்டறியலாம் என புரதான ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கீழடியில் ஆய்வு நடத்திய மத்திய தொல்லியல் துறை அதிகாரி மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் அகழாய்வுக்கு அனுமதி கேட்டார். அப்போது மாநகராட்சி மறுத்துவிட்டது. அனுமதித்து இருந்தால் அப்போதே அகழாய்வு நடத்தி, மதுரையின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றி இருப்பார். அகழாய்வு நடத்த வேண்டிய இடத்தில் தற்போது மாநகராட்சி ராட்சத இயந்திரம் மூலம் தோண்டி வாகன நிறுத்துமிடம் கட்ட அண்டர் கிரவுண்ட் தோண்டி சீரழிக்க கூடாது. மதுரை மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் தொன்மையை கண்டறிய அகழாய்வு நடத்த வேண்டும்’ என்றனர்.

மதுரையின் மிக முக்கிய பகுதி...

*மதுரையின் புதிய சிறைச்சாலை புதுஜெயில் ரோட்டில் 1869ல் கட்டப்பட்டது. அதற்கும் முன்பு பழைய சிறைச்சாலை மதுரை மீனாட்சி கோயில் பகுதியில் உள்ள பழைய சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் பகுதியில்தான் இருந்தது. இந்த மார்க்கெட்டை 1906 நவ.21ல் அன்றைய சென்னை கவர்னர் ஆர்தர்லாலே துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் இப்பகுதி மீனாட்சிகோயில் கட்டுமான பொருட்கள் வைக்கவும், பணிக்கு உதவிய யானைகளை கட்டி வைக்கவும் பயன்பட்டிருக்க வேண்டும். பின்னாளில் ராணிமங்கம்மாள் (1680-1706) அரண்மனை பகுதியாகி, அதன்பிறகே மதுரையின் முதல் சிறைப்பகுதியாக மாறி, சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இங்கு வந்திருக்கிறது. கலெக்டர் செனாய் எழுதிய ‘மதுரா டெம்பிள்சிட்டி’ நூலில் இங்கு ‘ராணிமங்கம்மாள் கைதாகி சிறை வைக்கப்பட்டார்’ என்ற குறிப்பு உள்ளது. இதேபோல் பண்டிட் சாம்பசிவனின் ‘மாநகர் மதுரை’ நூல், ‘மையச்சந்தையின் கீழ்புற கட்டடம் ராணிமங்கம்மாள் அரண்மனை, அவரை சிறைவைத்த இக்கட்டிடமே பழைய சிறைச்சாலை’ என தெரிவிக்கிறது. மேலும் 1916ல் நாயக்கர் வரலாற்று நூலில் என்ஆர் சுப்பிரமணியசர்மா, ‘அந்திக்கடை பொட்டலுக்கு வடக்கே, ராமநாதபுரம் கலெக்டர் ஆபீஸ், சென்ட்ரல் மார்க்கெட், மெஜூராகல்லூரி மூன்றாம்பிரிவு பள்ளிக்கூடம், முனிசிபில் கிளை ஆஸ்பத்திரி, ராஜாங்க பெண் பாடசாலை இதெல்லாம் மங்கம்மாள் அரண்மனை பகுதிகளாகும். இதில் பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன’ என தெரிவிக்கிறார். இன்றும் ‘ஜெயில் காளி’ என்ற கோயில் மட்டும் இடிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது. இதுவே இங்கு முதல் சிறை இருந்தததற்கான ஆதாரத்தை காட்டுகிறது. இப்பகுதியில் அகழாய்வு நடத்துவது பல பழமை வரலாற்றை கொண்டு வந்து சேர்க்கும் என்பது உறுதி.

Related Stories: