நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தல் தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும்

புதுடெல்லி: தமிழகத்தில் நடந்த தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும், முன்பு இருந்ததைப் போலவே பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். தபால் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இம்முறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால்  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் இத்தேர்வு நடத்தப்பட்டது.  இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது.

மாநிலங்களைவயில் பூஜ்ய நேரத்தில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, ‘‘தபால் துறை தேர்வுகள் இனி ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பானது, தமிழக இளைஞர்கள் மனதில் போராட்ட உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ரயில்வே உள்ளிட்ட பிற மத்திய அரசு பணிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழக மாணவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த புதிய உத்தரவு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. பிராந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படாவிட்டால், அது முழுமையாக தேவையற்றதாகி விடும். எனவே, மத்திய அரசு தனது உத்தரவை திரும்பப் பெற்று, பிராந்திய மொழிகளிலும் போட்டித் தேர்வை நடத்த வேண்டும்’’ என்றார்.

அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ‘‘தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதற்கான காரணம் மிக எளிமையானது, அதேசமயம் மிகவும் அவசியமானது. கேள்வித்தாள் தமிழ் மொழியிலும் கொண்ட புதிய தேர்வை நடத்த வேண்டும்’’ என்றார்.  இதுகுறித்து பதிலளித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘இந்த விவகாரம் மிக முக்கியமானது. இந்த விவகாரத்தை அமைச்சர் தவார்சந்த் கெலாட் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே நான் அவரிடம் பேசி உள்ளேன். தமிழக எம்பிக்களும் அவருடன் ஆலோசிக்க வேண்டும்’’ என்றார்.மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘தமிழகத்தில் தபால் துறை தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2013ல் வெளியிடப்பட்ட அரசாணையில், அகில இந்திய போட்டித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. மக்களின் நலனைப் பற்றி மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை’’ என்றார்.

மேற்கு வங்கத்தை குறிவைக்கிறது மத்திய அரசு

மக்களவையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்த்யோபாத்யாயா, ‘‘கடந்த 10 நாளில் 10 பரிந்துரைகளை மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. எதற்கு மேற்கு வங்க அரசு குறிவைக்கப்படுகிறது? இது ஜனநாயக அமைப்பை சிதைக்கும் முயற்சியாகும்’’ என்றார்.  இதற்கு பாஜ எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க அரசுக்கு எந்த மாதிரியான பரிந்துரைகளை மத்திய அரசு வழங்கியது என்பது தொடர்பாக சுதிப் பந்த்யோபாத்யாயா விளக்கமாக தெரிவிக்கவில்லை.

Related Stories: