பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணையை முடிக்க 6 மாத கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு நீதிபதி கோரிக்கை

புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலம்  அவகாசம் தேவை என்று சிறப்பு நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை  விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர்  மசூதி கடந்த 1992ம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.  இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. பாஜ  மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வழக்கில்  இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து சிபிஐ தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  `பாபர் மசூதி வழக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படுகிறது. மூத்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டது  குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்.

 அலகாபாத் உயர் நீதிமன்றம்  கடந்த 2001ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது  சதி குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் விடுவித்து தீர்ப்பு வழங்கியது தவறு. தினமும் விசாரணை நடத்தி, இரண்டு  ஆண்டுகளுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்’ என்று கடந்த 2017ம்  ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி உத்தரவிட்டது. இந்த காலக்கெடு கடந்த ஏப்ரல்  19ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து  சிறப்பு நீதிமன்ற நீதிபதி கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்  எழுதி உள்ளார்.  அதில், ‘‘உச்ச நீதிமன்றம் அனுமதித்த 2 ஆண்டு அவகாசம் முடிந்துவிட்டது. வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் பதவி ஓய்வு பெற உள்ளேன். மேலும்  இந்த வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

எனவே வழக்கு  விசாரணையை முடிப்பதற்கு கூடுதலாக 6 மாதம் அவகாசம் தர வேண்டும்’’ என்று  கூறப்பட்டுள்ளது.இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நாரிமன்  அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  இதுகுறித்து உபி. மாநில அரசு வரும் 19ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 விஐபிக்களில்  கிரிராஜ் கிஷோர், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் வழக்கு  விசாரணையில் இருக்கும்போது இறக்க நேரிட்டதால் அவர்கள் மீதான விசாரணை  முடித்து வைக்கப்பட்டது.

Related Stories: