நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு: மீட்பு பணி தீவிரம்

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. சாலைகள் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகளிலும் நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கனமழை காரணமாக பல இடங்கில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, மின்சப்ளை பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில் 43 பேர் பலியாகியுள்ளனர். லலித்பூர், கவ்ரே, கோடாங், போஜ்பூர் மற்றும் மகன்பூர் மாவட்டங்களில் தான் அதிகப்படியானோர் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி இறந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 24 பேர் கதி என்ன ஆனது என தெரியவில்லை.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கிய 50 பேரை மீட்டுள்ளனர். இது தொடர்பாக நேபாள உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ளப் பெருக்கு காரணமாக 6000க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கப் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Related Stories: