கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி முதல்வராகவும், காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்வராகவும் உள்ளனர். இந்நிலையில் அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு கிடைக்காத எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். கடந்த 6ம் தேதி காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் நெருக்கடியில் சிக்கியுள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் காப்பாற்ற முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் வழங்கினர்.

ஆனால் சபாநாயகர் அவர்களின் கடிதத்தை ஏற்க மறுத்தார். ராஜினாமா செய்த அனைத்து எம்எல்ஏக்களும் நேரில் வந்து விளக்கமளித்தால் அவர்களின் ராஜினாமா கடிதத்தை பரீசீலனை செய்வதாக கூறியிருந்தார். ஆனால், ராஜினாமா செய்தவர்களில் 10 எம்.எல்.ஏக்கள் மும்பை நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். எனவே, எம்எல்ஏக்கள் தங்கியுள்ள மும்பை நட்சத்திர ஓட்டலுக்கு கர்நாடக அமைச்சர் சிவக்குமார் நேரில் சென்று சமரசம் பேச முயன்றார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து, ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் சபாநாயருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். அரசியலமைப்பு சட்டப்படி சபாநாயகர் தனது கடமையை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதற்கிடையில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனால் ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்தது. மறுபுறம் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இத்தகைய சூழலில் இன்று காலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. அதில் தனது ராஜினாமா முடிவை முதல்வர் குமாரசாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் டிகே சிவகுமார், முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமமல்லாது, எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் குறித்து பதில் அளிக்க கர்நாடக சபாநாயகர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இவ்விகாரத்தில் சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக டி.ஜி.பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: